நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள், 500 நகரங்கள் மேம்பாடு, அனைவருக்கும் வீடு திட்டத்தில் 2 கோடி வீடுகளை கட்டுவது ஆகிய மூன்று திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று தொடங்கிவைத்தார். இத் திட்டங்களுக்கான வழிகாட்டு நெறி களையும் அவர் வெளியிட்டார்.
சர்வதேச தரத்துக்கு இணையாக ரூ.48 ஆயிரம் கோடியில் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக் கவும் அடல் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.50 ஆயிரம் கோடி யில் 500 நகரங்களை அனைத்து வசதிகளுடன் புதுப்பிக்கவும் மத்திய அமைச்சரவை அண்மை யில் ஒப்புதல் அளித்தது. இதே போல அனைவருக்கும் வீடு திட்டத் தில் அடுத்த ஏழு ஆண்டுகளில் 2 கோடி வீடுகளைக் கட்டிக் கொடுக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டங்களின் மொத்த மதிப்பீடு ரூ.4 லட்சம் கோடியாகும்.
இந்த மூன்று திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டில் முதல்முறையாக இப்போது ஒரு சவாலை தொடங்கி யுள்ளோம். அதன்படி நாடு முழுவதும் அதிநவீன வசதிகளுடன் கூடிய 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத் தில் பொதுமக்கள் தங்களது பங்களிப்பை அளிக்கலாம்.
இத்திட்டத்தை நிறைவேற்று வதில் மத்திய அரசும் மாநில அரசுகளும் கைகோத்து செயல்பட வேண்டும்.
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தை மத்திய அரசு தனியாக தயாரிக்க வில்லை. உலகளாவிய அளவில் கட்டுமானத் துறையில் உள்ள சிறந்த நடைமுறைகள் ஆராயப் பட்டு, பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனை களுடன் இத்திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.
அடல் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் (அம்ருத்) மூலம் நாடு முழுவதும் 500 நகரங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், குடிசை வாசிகள் ஆகியோரின் நலன்கள் கருத்தில் கொள்ளப்படும்.
ஹைதராபாதில் உள்ள வரிவசூல் முறை, கர்நாடகத்தின் திடக்கழிவு மேலாண்மை, சத்தீஸ்கரின் திறந்தவெளிக் கழிப்பிட ஒழிப்பு திட்டம் ஆகியவை சிறப்பானவை. இதை அனைவரும் பின்பற்றலாம்.
ஏழைகளாக இருப்பது விதிவசம் அல்ல. அவர்கள் கடைசிவரை ஏழைகளாக வாழ அனுமதிக்கமாட்டோம். ஒவ்வொரு ஏழையின் வாழ்விலும் வீடு கட்டுவது என்பது ஒரு திருப்புமுனையாகும். நமது நாட்டில் அனைவருக்கும் வீடு தேவைப்படுகிறது. அதற்காக வரும் 2022-ம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகளை கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
ஒரு நகரம் எப்படி உருவாக வேண்டும் என்பதை ரியஸ் எஸ்டேட் அதிபர்கள் முடிவு செய்யக்கூடாது. அதை நிர்ணயிக்க வேண்டியது அந்த நகரத்தில் வாழும் மக்கள்தான். நமது நாடு அதிவேகமாக நகரமயமாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறு நாட்டுக்கு இணையாக இந்தியாவில் நகரங்கள் உருவாகி வருகின்றன.
விரைவில் புதிய மசோதா
வீடு வாங்குவோரை பாது காப்பது அரசின் கடமை. இது தொடர்பாக மழைக்கால கூட்டத் தொடரில் மசோதா கொண்டுவரப் படும். வாயையும் வயிற்றையும் கட்டி தாங்கள் சேமிக்கும் பணத்தை வீடு வாங்க செலவிடும் மக்கள் ஏமாற்றப்பட்டால் எல்லாமே பறிபோய் விடுகிறது. இதை தடுக்கும் வகையில் புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மோடி கூறினார்.
மூன்று திட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பிரதமர் வெளியிட்டார்.
இந்த விழாவில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், ஜம்மு துணை முதல்வர் நிர்மல் குமார் சிங், பல்வேறு மாநகராட்சிகளின் மேயர்கள், உள்ளாட்சி அமைப்பு களின் தலைவர்கள். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் 12 நகரங்கள்
நாட்டில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 13 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்கு அடுத்து தமிழகத்தில் 12 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக் கப்பட உள்ளன. அடல் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் 33 நகரங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்துக் காக மத்திய அரசிடம் தமிழக அரசு அளித்துள்ள பட்டியலில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய 12 மாநகராட் சிகளின் பெயர்கள் பரிந்துரைக் கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.