‘‘லலித் மோடிக்கு உதவிய ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவை, பாஜக இனிமேலும் பாதுகாக்க முடியாது. அவரை ராஜினாமா செய்ய பாஜக உத்தரவிட வேண்டும்’’ என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் சச்சின் பைலட் வலியுறுத்தி உள்ளார்.
ஐபிஎல் ஊழலில் குற்றம் சாட்டப் பட்ட லலித் மோடி, லண்டன் சென்று விட்டார். அங்கிருந்து போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள மனைவியை பார்க்க செல்வதற்கு விசா கிடைக்கவில்லை. இதையடுத்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ஆகியோர் உதவியாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் நேற்று கூறியதாவது:
இங்கிலாந்தில் வசிக்க குடியேற்ற விண்ணப்பத்தில் லலித் மோடியை பரிந்துரை செய்து ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா கையெழுத்திட்டுள்ளது ஆதாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ஆனால், அந்தக் கையெழுத்து போலியானது என்று பாஜக கூறுகிறது.
வசுந்தராவின் தலையீடு இருப்பது ஆதாரப்பூர்வமாக தெரிகிறது. இனி மேலும் அவரை பாஜக பாதுகாக்க முடியாது. அவர் முதல்வராக நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார். எனவே, பதவியை ராஜினாமா செய்ய வசுந்தராவை பாஜக மேலிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
லலித்மோடியின் விண்ணப்பத்தில் இருப்பது தனது கையெழுத்து இல்லை என்று வசுந்தரா சொல்வாரென்றால், அதை முன்பே சொல்லி இருக்க வேண்டும். அவருக்கு தெரியும் அந்த கையெழுத்து அவருடையதுதான் என்று. அதை அவர் மறுக்க முடி யாது. சட்டத்தை மீறி வசுந்தரா செயல்பட்டுள்ளது பாஜக.வுக்கு நன்று தெரிகிறது. இனிமேலும் வசுந்தராவை பாதுகாக்க முடியாது என்பதும் பாஜகவுக்கு தெரியும்.
சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம், பாஜக உயர் அதிகாரிகளுக்கு ஒரு சட்டம் என்று நாட்டில் இரண்டு சட்டம் இருக்க முடியாது. மாநிலத்தின் நலன் கருதியும், ஏன் பாஜக.வின் நலன் கருதியும் வசுந்தராவை பதவி விலக செய்வதுதான் நல்லது. இவ்வாறு சச்சின் பைலட் கூறினார்.