சென்னையில் நாளை நடைபெறவிருக்கும் விஜய் படப் பூஜையில் ரஜினி கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'புலி' படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 'புலி' படத்தின் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து குடும்பத்துடன் லண்டன் சென்றிருந்த விஜய், இன்று இரவு சென்னை திரும்ப இருக்கிறார்.
சென்னையில் ஈ.சி.ஆர் சாலையில் உள்ள கேரளா ஹவுஸ் என்ற இடத்தில், அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தின் பூஜை நாளை (ஜூன் 25) நடைபெறவிருக்கிறது. இதே இடத்தில் தான் 'ராஜா ராணி' படத்தின் பூஜையும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் இப்பூஜையில் ரஜினி கலந்து கொள்ள இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. ரஜினி - ரஞ்சித் கூட்டணி, விஜய் - அட்லீ கூட்டணி ஆகிய இரண்டு படங்களையுமே தாணு தான் தயாரிக்கிறார். ஆகையால், தாணு ரஜினியிடம் பேசி இப்பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.