ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. நாளை வாக்குப்பதிவு நடப்பதையொட்டி, தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கு 27-ம் தேதி (நாளை) இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 3-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி முடிந்தது. அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சி.மகேந்திரன், சுயேச்சையாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உள்பட 28 பேர் களத்தில் உள்ளனர்.
அதிமுக வேட்பாளரான முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22-ம் தேதி தொகுதியில் பிரச்சாரம் மேற் கொண்டார். இவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த அதிமுகவினர் 20 நாட்களுக்கும் மேலாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரனும் அவருக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகளும் வாக்கு சேகரித்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தது. இதையடுத்து, தொகுதிக்கு தொடர்பில்லாத அரசியல் கட்சியினர், வெளி நபர்கள் தொகுதியில் இருந்து வெளியேற தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டனர். தொகுதியில் வெளியூர் நபர்கள் யாராவது உள்ளார்களா என போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். 28 பறக்கும் படையினர், 15 மண்டல கண்காணிப்பு பிரிவினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இடைவிடாது வாக்குப்பதிவு நடக்கும். தொகுதி முழுவதும் 230 வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட்டுள்ளன. இவற்றில் 22 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவையொட்டி தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக போலீசார் 987 பேருடன் துணை ராணுவப்படையினர் 720 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பாதுகாப்பு குழுவிலும் ஒரு எஸ்ஐ, 2 தலைமைக் காவலர்கள், 5 போலீஸார் இருப்பர். 12 ‘பூத்’கள் கொண்ட வாக்குச்சாவடி மையத்தில் 2 பாதுகாப்பு குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்படுவர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை 30-ம் தேதி நடக்கிறது.
பாதுகாப்பு மற்றும் தேர்தல் பணிகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:
வாக்குசாவடி மையங்களில் போதுமான அளவு போலீஸார் பணியமர்த்தப்படுகின்றனர். வாக்குப்பதிவு முழுவதும் ‘வெப் கேமரா’ மூலம் பதிவு செய்யப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படுகிறது. இதற்காக வாக்குச்சாவடி மையங்களுக்கு பிஎஸ்என்எல் மூலம் ‘வை-பை’ இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நிலவரம், ஒரு வாக்குச்சாவடியில் ஆண், பெண் வாக்குகள் பதிவான விவரம், வரிசையில் காத்திருப்பவர்களை பொதுமக்கள் உள்ளூர் கேபிள் டிவி வாயிலாக பார்க்க முடியும். செல்போன் செயலி மூலம் பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
தொகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் ‘அதிவிரைவு நடவடிக்கைக் குழு’ அமைக் கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின் போது வரும் புகார்கள் தொடர்பாக இவர்கள் நடவடிக்கை எடுப்பர்.
இவ்வாறு சந்தீப் சக்சேனா கூறினார்.