நாடாளுமன்றத்தில் தமிழுக்காகவும், திருக்குறளுக்காகவும் குரல் கொடுத்து வரும் உத்தரகண்ட் மாநில பாஜக எம்.பி. தருண் விஜய்யை தமிழக தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 பேர் குழுவினர் புது தில்லியில் புதன்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தஞ்சை தமிழ்த்தாய் அறக்கட்டளையின் பொதுச் செயலரும், தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான உடையார் கோயில் குணா உள்ளிட்ட 13 பேரும் தருண் விஜய் எம்.பி.யை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை பிற்பகல் நேரில் சந்தித்தனர். திருவள்ளுவர் தினத்தை மத்திய அரசுப் பள்ளிகளில் கொண்டாடுவதற்கு காரணமாக இருந்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
அகில இந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலர் இரா.முகுந்தன், தில்லி தமிழ்ச் சங்க இணைப் பொருளாளர் ஏ.ஜெயமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் கே.முத்துசாமி, வெ.முத்துக்குமார் உள்ளிட்டோரும் நன்றி தெரிவித்தனர். அப்போது, அவரிடம் 10 கிலோ எடையுள்ள ஓர் அடி உயரத்திலான திருவள்ளுவர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினர். இதைத் தொடர்ந்து, மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து, கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனையும் அவர்கள் நேரில் சந்தித்து நன்றியைத் தெரிவித்தனர். தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த துரை.இராசமாணிக்கம், குடியாத்தம் குமணன், தகடூர் தமிழ்க்கதிர், சி.க.மணி, செ.ப.சுந்தரம், ப.கோ.நாராயணசாமி, தாமரைப்பூவண்ணன், க.மல்லிகா, இல.தட்சிணாமூர்த்தி, மா.ராதாகிருஷ்ணன், உ.சிவகாமி, இரா.மும்தாஜ்பேகம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
தருண் விஜய் எம்.பி.யை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தஞ்சை தமிழ்த்தாய் அறக்கட்டளை, தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு குழுவினர், தில்லி தமிழ்ச் சங்கத்தினர் மற்றும் அகில இந்திய தமிழ்ச் சங்கப் பேரவை பொதுச் செயலர் இரா. முகுந்தன் உள்ளிட்டோர்.