நிகழாண்டின் அமைதிக்கான நோபல் பரிசை, இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தியும், பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசஃப்சாயும் புதன்கிழமை பெற்றுக் கொண்டனர். நார்வே தலைநகர் ஆஸ்லோவில் உள்ள சிட்டி அரங்கில் நடைபெற்ற வண்ணமிகு விழாவில், சத்யார்த்தி, மலாலா ஆகியோருக்கு நோபல் குழுத் தலைவர் தோர்ப்ஜான் ஜக்லண்ட், பரிசுகளை வழங்கிக் கெளரவித்தார்.
முன்னதாக, விழாவில் அவர் பேசியதாவது: அமைதிக்கான நோபல் பரிசை இரண்டு பேர் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களில், ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி; மற்றொருவர் இந்தியாவைச் சேர்ந்த வயது முதிர்ந்தவர். ஒருவர் ஹிந்து; மற்றொருவர் முஸ்லிம். இந்த இரண்டு குறியீடுகளும் இரு நாடுகளுக்கும் இடையே ஒற்றுமை, சகோதரத்துவம் நிலவ வேண்டும் என்று உலகுக்கு உணர்த்துகின்றன. வன்முறைகளையும், அடக்குமுறைகளையும் எந்த மதமும் நியாயப்படுத்தவில்லை. ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், பெளத்தம் உள்ளிட்ட மதங்கள், உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றே போதிக்கின்றன. ஆனால், உயிர்களைக் கொல்வதற்கு அவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
"பல நோக்கங்களுக்காக நான் இறக்கலாம்; ஆனால் நான் கொல்லப்படுவதற்கு ஒரு நோக்கமும் இருக்கக் கூடாது' என்ற மகாத்மா காந்தியின் கூற்றுப்படி, இவர்கள் இருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றார் தோர்ப்ஜான் ஜக்லண்ட். நோபல் பரிசு: சத்யார்த்தி, மலாலா ஆகிய இருவரும் 175 கிராம் எடையிலான தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டனர். மேலும், 1.1 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6.82 கோடி) தொகையை அவர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். சத்யார்த்தி: விழாவில், நோபல் பரிசைப் பெற்றுக் கொண்ட பிறகு சத்யார்த்தி (60) பேசியதாவது: தனித்து விடப்பட்ட லட்சக்கணக்கான குழந்தைகளின் மெளனத்தின் சாட்சியாக பேசுகிறேன். பல ஆண்டுகால உழைப்புக்குப் பிறகு, குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது. நாகரிக சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு இடமே இல்லை. குழந்தைகள் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்றே அனைத்து மதங்களும் கூறுகின்றன.
ஒவ்வொரு குழந்தையும் சுதந்திரமாக வளர வேண்டும் என்பதே எனது கனவாகும். அவர்களின் கனவுகளைச் சிதைப்பதைவிட மிகப்பெரிய வன்முறை எதுவுமில்லை என்றார் சத்யார்த்தி. குழந்தைத் தொழிலாளர்களைக் காப்பாற்றவும், குழந்தைகள் கடத்தலைத் தடுக்கவும், தனது பொறியாளர் பணியைத் துறந்தவர் கைலாஷ் சத்யார்த்தி. தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை தொடங்கி, 35 ஆண்டுகளில், நாடு முழுவதும் பட்டறைகளிலும், தொழிற்சாலைகளிலும் கொத்தடிமைகளாகப் பணிபுரிந்து வந்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை இவர் மீட்டுள்ளார். மலாலா: பாகிஸ்தானில் பெண் குழந்தைகளின் உரிமைக்காக போராடி வருபவர் மலாலா யூசஃப்சாய் (17). இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், பலத்த காயமடைந்து, உயிர் பிழைத்தவர். தலிபான் தாக்குதலுக்குப் பிறகும், குழந்தைகள் உரிமைக்காகவும், பெண் கல்விக்காகவும் போராடி வருபவர்.
மிகக் குறைந்த வயதிலேயே நோபல் பரிசு பெற்ற சாதனையாளர்:
நோபல் குழு தேர்வு: நிகழாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்காக, இவர்கள் இருவர் பெயரையும் நோபல் பரிசுக் குழு கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி தேர்வு செய்து அறிவித்தது.
மோடி வாழ்த்து : நோபல் பரிசு பெற்ற சத்யார்த்தி, மலாலா ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார். நோபல் பரிசு வழங்கப்பட்டவுடன் மோடி தனது சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆஸ்லோ நகரில் நோபல் பரிசு வழங்கப்படும் நிகழ்வை, பெரு மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துடனும் நாடே கவனித்துக் கொண்டிருக்கிறது. சத்யார்த்திக்கு வாழ்த்துகள். சிறுவயதில் சாதனை புரிந்த மலாலாவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மோடி கூறியுள்ளார்.