இலங்கை அதிபர் ராஜபட்ச வருகை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மீது ஆந்திர போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை அதிபர் ராஜபட்ச வருகை குறித்து செய்தி சேகரிப்பதற்காக தமிழ்ப் பத்திரிகையாளர்கள் திருமலையில் கூடினர். அவர்களுக்கு செய்தி சேகரிக்க, ஆந்திரப் போலீஸார் அனுமதி மறுத்தனர். இதற்கு தமிழ்ப் பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களை செய்தி சேகரிக்க அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆந்திரப் போலீஸார் தமிழ் பத்திரிகையாளர்கள் மீது திடீரென தடியடி நடத்தினர். அவர்களிடமிருந்த கேமராக்கள், மின் விளக்குகளையும் அடித்து உடைத்தனர். வனப்பகுதியில் தவிப்பு: பின்பு, தமிழ்ப் பத்திரிகையாளர்களை கைது செய்து, திருமலையிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, சிறுத்தைகள் நடமாட்டம் உள்ள பாபவிநாசம் வனப்பகுதியில் விட்டுவிட்டு சென்றனர்.
மேலும், வனத்துக்குள் விடப்பட்ட தமிழ்ப் பத்திரிகையாளர்கள், திருமலைக்கு திரும்ப வழி தெரியாமல் அவதிப்பட்டனர். அவர்களை ஆந்திரப் போலீஸார் தரக்குறைவான வார்த்தைகளால் பேசினர். மேலும், தனியார் டி.வி செய்தியாளர் குணசேகரை கைது செய்து, ஆர்ப்பாட்டம் செய்த ம.தி.மு.க.வைச் சேர்ந்த மல்லை சத்யாவுடன் அமர வைத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் தன் 2 பவுன் தங்கச் சங்கிலியை இழந்தார். இலங்கை அதிபர் ராஜபட்ச சென்ற பிறகு அவர்களை விடுவித்தனர். 3 போலீஸ் அதிகாரிகள்: தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மீது தடியடி நடத்த ஏ.எஸ்.பி. ஸ்வாமி, டி.எஸ்.பி. சரத் சந்திரா, டி.எஸ்.பி. நரசப்பா ஆகியோர் உத்தரவிட்டனர். இது குறித்து, தமிழ்ப் பத்திரிகையாளர்கள் திருப்பதி எஸ்.பி.,கோபிநாத் ஜெட்டியிடம் புகார் அளித்தனர். இது குறித்து, அவர் விசாரணை நடத்தி இதற்கு காரணமானவர்களை பணியிடை நீக்கம் செய்வதாகத் தெரிவித்தார்.
மேலும், தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு சித்தூர் பத்திரிகையாளர் சங்கமும், திருப்பதி பத்திரிகையாளர் சங்கமும் ஆதரவு அளித்தனர். மேலும், வியாழக்கிழமை பத்திரிகையாளர்கள் (ஆந்திரம், தமிழ்) போலீஸாரின் அராஜகத்தை கண்டித்து, பேரணி நடத்த உள்ளனர். வாகனங்களுக்கு தடை: இலங்கை அதிபர் ராஜபட்ச தரிசனம் முடித்து திரும்பி வெளியே வரும் வரை, ஏழுமலையான் கோயிலில் சாதாரண பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதியளிக்கவில்லை. மேலும், ராஜபட்ச திரும்பும் வரை திருமலை மலைப்பாதையிலும், பக்தர்களின் வாகனங்கள் செல்ல அனுமதியளிக்கப்படவில்லை. வி.ஐ.பி பிரேக் தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்களும், பல்வேறு சேவைகளுக்கு டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்களும், ஏழுமலையானை தரிசிக்க முடியாமல், திருப்பதியிலிருந்து ஏமாற்றத்துடன் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்