குமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்துள்ள நிலையில், அணைகளின் நீர்மட்டத்தை படிப்படியாக உயர்த்தி முழுக் கொள்ளளவுக்கு கொண்டுவர பொதுப்பணித் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.வெள்ளப் பெருக்கை தடுத்த பொதுப்பணித் துறையினர்: குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாகத் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவைக் கடந்து நிற்கிறது. இதில், கடந்த ஆண்டுகளைப் போலில்லாமல் நிகழாண்டு பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் உள்வரத்தாக வந்த கூடுதல் தண்ணீரை, பாசனப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் பாசனக் கால்வாய்கள் வழியாக திறந்து விடப்பட்டது. இதன்மூலம் ஆறுகளில் கரையோரப் பகுதிகளில் ஏற்பட இருந்த குறைந்தபட்ச வெள்ளப் பெருக்கும் தடுக்கப்பட்டது.
75 அடியைக் கடந்து சென்ற பெருஞ்சாணி நீர்மட்டம்: தற்போது பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 75 அடியைக் கடந்து, 75.32 என்ற அளவில் உள்ளது. அணையிலிருந்து பாசனக் கால்வாய் வழியாக, விநாடிக்கு 350 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.80 ஆக உயர்ந்துள்ளது : இதுபோல், சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் தலா 15.58 அடியாக உயர்ந்த நிலையில் உள்ளது. இந்த அணைகளில் இருந்து விநாடிக்கு 150 கனஅடி தண்ணீர் பாசனக் கால்வாயில் திறக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்துள்ளதால் இம்மாதம் இரண்டாவது வார இறுதியில் நீர்மட்டத்தை படிப்படியாக உயர்த்தி, அனைத்து அணைகளிலும் முழுக் கொள்ளளவு நீர்மட்டம் எட்டப்படும் என்றார்.