அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று ஜெப் புஷ் கூறியுள்ளார்.இவர் முன்னாள் அதிபர்களான ஜார்ஜ் புஷ்ஷின் இளைய மகனும், ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷின் இளைய சகோதரரும் ஆவார்.ஜெப் புஷ், ஃபுளோரிடா மாகாணத்தின் ஆளுநராக, 1999-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டுவரை பதவி வகித்தவர்.அதிபர் தேர்தலில் ஜெப் புஷ் போட்டியிடக் கூடுமென, அவரது மகன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.இந்நிலையில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளேட்டுக்கு அவர் அளித்த பேட்டியில், அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மிக விரைவில் அறிவிப்பேன் என்றார்.குழப்பச் சுழலில் சிக்கிக் கொள்ளாமல், மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்ப முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுமானால், தேர்தலில் போட்டியிடுவேன்.நான் நல்ல வேட்பாளரா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் எவ்வாறு வெற்றி பெற வேண்டும் என்பது எனக்குத் தெரியும் என்று அவர் கூறினார்.
வெளியுறவுக் கொள்கையைப் பொருத்தவரையில், அமெரிக்க ராணுவத்தை மறு சீரமைத்து வலிமைப்படுத்துவது, உளவுத் தகவல் சேகரிப்பைத் தீவிரப்படுத்துவது மிக முக்கியமானதாகும். சர்வதேச விவகாரங்களில் நாம் ஈடுபடுவதிலிருந்து நாம் பின்வாங்கிவிட முடியாது என்று பலரும் உணரத் தொடங்கியுள்ளனர்.சீனாவோடு, நெருங்கிச் செயல்பட வேண்டும். சர்வதேச வல்லரசாக சீனா உருவெடுக்கும்போது, அமெரிக்கா அதைக் கண்டும் காணாமல் இருந்துவிட முடியாது. சர்வதேச பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் சீனா தலைமைப் பொறுப்பு ஏற்பதை அமெரிக்கா ஊக்குவிக்க வேண்டும் என்றார் ஜெப் புஷ்.
இவரது தந்தை ஜார்ஜ் புஷ், 1989-ஆம் ஆண்டு முதல் 1993 வரை அமெரிக்க அதிபராகப் பதவி வகித்தார். இவரது அண்ணன், ஜார்ஜ் டபிள்யு புஷ் 2001-ஆம் ஆண்டு முதல் 2009 வரை அதிபராக இருந்தார்.இந்த இரு புஷ்களையடுத்து, அவர்களது குடும்பத்தின் மற்றுமொரு உறுப்பினர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடும் என கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.