தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத், செவ்வாய்க்கிழமை திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய தலைமைச் செயலராக, மின்சார வாரியத் தலைவராக இருந்த கே.ஞானதேசிகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மோகன் வர்கீஸ் சுங்கத்துக்கு, அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் இயக்குநர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள ஞானதேசிகனிடம், கண்காணிப்பு, நிர்வாகச் சீர்திருத்தத் துறை ஆணையாளர் பொறுப்பு கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை தலைமைச் செயலராக இருந்த வர்கீஸ் சுங்கத், செவ்வாய்க்கிழமை காலை பிறப்பித்தார்.
43-ஆவது தலைமைச் செயலாளர்: தமிழகத்தின் 43-ஆவது தலைமைச் செயலராக ஞானதேசிகன் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி தாலுகா திருவேங்கடநாதபுரத்தைச் சேர்ந்தவர். கடந்த 1959-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி பிறந்தார். ஆங்கிலம், ஹிந்தி, ஜெர்மனி உள்ளிட்ட மொழிகளில் நன்கு புலமை பெற்றவர். பி.இ., பட்டமும், பிரிட்டனில் எம்.பி.ஏ. பட்டத்தையும் பயின்றவர். 1982-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகத் தேர்ச்சி பெற்றார்.1984-ஆம் ஆண்டு துணை ஆட்சியராகப் பணியைத் தொடங்கிய அவர், நிதித் துறையில் சார்புச் செயலாளராகவும், 1991 முதல் 1993 வரையிலான காலத்தில் விருதுநகர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றினார். கடந்த 2001-2003-ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராகவும், 2003-2005-ஆம் ஆண்டில் பள்ளிக் கல்வித் துறை செயலாளராகவும் பணியாற்றினார். 2005 முதல் 2010-ஆம் ஆண்டு வரை நிதித் துறைச் செயலாளராக இருந்தார்.அதன்பிறகு, 2010 முதல் 2011-ஆம் ஆண்டு வரை உள்துறைச் செயலாளராகப் பொறுப்பு வகித்த அவர், 2011-ஆம் ஆண்டில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதன்பிறகு, 2012-ஆம் ஆண்டு செப்டம்பரில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
பல்வேறு முக்கியத் துறைகளில் செயலாளர் பொறுப்பை வகித்துள்ள ஞானதேசிகனுக்கு (55) தலைமைச் செயலர் பொறுப்பை வகிப்பதில் பெரியளவுக்கு சிரமம் ஏதும் இருக்காது என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அதேசமயம், கடந்த மார்ச் மாதம் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்ட மோகன் வர்கீஸ் சுங்கத் (58) சில ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.காலையில் உத்தரவு-மாலையில் பொறுப்பேற்பு: புதிய தலைமைச் செயலராக ஞானதேசிகனை நியமிப்பதற்கான உத்தரவு செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வெளியானது. இதைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாலை 4.35 மணியளவில் அவர் தலைமைச் செயலராகப் பொறுப்பேற்றார். அவரிடம் தனது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு மாலை 5 மணியளவில் தலைமைச் செயலகத்தில் இருந்து விடை பெற்றுச் சென்றார் மோகன் வர்கீஸ் சுங்கத்.தலைமைச் செயலராக நியமிக்கப்பட்ட ஞானதேசிகனுக்கு பல்வேறு துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதனால், தலைமைச் செயலர் அலுவலக வளாகம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அலுவலர்களால் நிரம்பி வழிந்தது.