கங்கை நதியைத் தூய்மையாக்க, ரூ.4,975 கோடி மதிப்பீட்டில் 76 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் சன்வார் லால் ஜாட், மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: கங்கை நதியைச் சீரமைத்து, தூய்மையாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கங்கை நதி பாயும் மாநிலங்களான உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் 76 திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வழக்கமான அளவைக் காட்டிலும், 12.30 மில்லியன் கங்கை நீரை கூடுதலாக நாள்தோறும் சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,649 கிராமப் பஞ்சாயத்துகளில் நதி வழித்தடத்தில் மலம் கழிப்பதைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை, மொத்தம் ரூ.4,975 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தவிர, கங்கை ஆற்றுப்படுகை மாநிலங்களுக்கு தனித்தனியே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது என்று சன்வார் லால் தெரிவித்தார்.