நேதாஜி குறித்த அனைத்து உண்மைகளையும் மத்திய அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். எங்கள் நெஞ்சில் நிறைந்த நேதாஜி குறித்த அனைத்து உண்மைகளையும் மத்திய அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, இத்தகைய உணர்வு கொண்ட அனைவரையும் இணைத்துக் கொண்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அறப்போர் நடத்தும் என்று கூறியுள்ள வைகோ இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-
இந்திய நாடாளுமன்றத்தில் மிகச்சிறந்த மேதையான எச்.வி. காமத்,நேதாஜி மரணம் குறித்து விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 1956 இல் நேரு அரசு ஷா நவாஸ்கான் தலைமையில் குழு அமைத்தது. அக்குழு நேதாஜி மறைந்ததாக அறிக்கை தந்தாலும், அக்குழு உறுப்பினரான சரத் சந்திர போஸ் அதனை மறுத்து, நேதாஜி சாகவில்லை என்றே கூறினார். 1967 க்குப் பின், மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர் சமர் குகா, நேதாஜியின் மரணம் குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். 350 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தந்தனர். 1970 ஜூலை 11 இல், பஞ்சாப் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோÞலா தலைமையில் ஒரு விசாரணைக்குழுவை இந்திரா காந்தி அமைத்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நேதாஜி இறந்ததாக அக்குழு அறிவித்தது.
ஆனால், பீகார் மாநிலத் தலைவர் சத்யேந்திர நாராயணன் சின்கா நேதாஜி குறித்த உண்மைகளை அறியப் பல ஆண்டுகள் போராடி, நேதாஜி பயணித்த விமானம் டைரன் என்ற நகருக்குப் பத்திரமாகப் போய்ச் சேர்ந்தது என்பதற்கான ஆதாரங்களைத் தெரிவித்தார். 1991 இல் சோவியத் யூனியன் உடைந்தபிறகு, கொல்கத்தாவில் உள்ள ஆசியக் கழகம், மாÞகோ சென்று, பல மாதங்கள் தங்கி, 30 ஆண்டுக்கால ஆவணங்களை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில், ‘மாÞகோவில் உள்ள ரஷ்ய உளவுத்துறையின் தலைமையகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கின்ற இரண்டு கோப்புகளில் நேதாஜி பற்றிய உண்மைகள் அடங்கி இருக்கின்றன; 1945, 47 ஆம் ஆண்டுகளில் இருந்த சில ரஷ்ய ராஜதந்திரிகள் இந்த உண்மையைக் கூறி உள்ளனர்’ என்று அறிக்கை தந்தது.
இந்தப் பின்னணியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, நேதாஜியைப் பற்றிய அனைத்து ஆவணங்களையும் வெளியிட மறுத்தது. இன்றைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி, நேதாஜி பிறந்த ஒடிஷா மாநிலத்தின் கட்டக் நகரில் நடைபெற்ற நேதாஜியின் 117 ஆவது பிறந்த நாள் விழாவில் உரை ஆற்றியபோது, நேதாஜி மறைவு குறித்த உண்மைகளை அறிந்து கொள்ள, இந்தியாவின் அனைத்து மக்களும் பொறுமையின் எல்லைக்கே சென்று கவலைப்படுகின்றனர். எனவே, உண்மைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கூறினார்.