பொதுமக்கள் அமைதியாக வழிபட முடியவில்லையெனில், கோயிலை இழுத்து மூடலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் தாலுகாவில் உள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இ.சமன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்த பொது நல மனு விவரம்: எங்களது கிராமத்தில் இரண்டு கங்கையம்மன் கோயில்கள் உள்ளன. ஊரில் இரண்டு குழுக்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதால், கோயிலைப் பூட்டி, வருவாய்த் துறை அதிகாரிகள் "சீல்' வைத்து விட்டனர். அதனால், வழிபட முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தேன். ஆனால், அதற்கு எந்தப் பதிலும் இல்லை. எனவே, கங்கையம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோயில்களில் வழிபடுவதில் சண்டையிட்டுக் கொள்ளும் அளவுக்கு இந்த சமுதாயத்தில் பிரிவினை உள்ளது. இது வருத்தமளிப்பதாக உள்ளது. கோயிலைப் பூட்டி, வழிபாட்டு உரிமையில் குறுக்கிட்டனர் என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மக்களால் அமைதியாக வழிபட முடியவில்லையெனில், கோயிலை இழுத்து மூடலாம். கோயிலை மூடி, அதிகாரிகள் "சீல்' வைத்தது சரியான முடிவுதான். மேலும், இந்த மனுவை பொது நல வழக்காகக் கருத்தில் கொள்ள முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.