மக்களவைச் செயலராக அனூப் மிஸ்ரா திங்கள்கிழமை பொறுப்பேற்றார். அவரது நியமனத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனூப் மிஸ்ராவை மக்களவைச் செயலராக நியமித்துள்ளதாக மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் திங்கள்கிழமை அறிவித்தார். உடனே, மக்களவையில் காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே எழுந்து, அனூப் மிஸ்ராவை நியமித்த முறைக்கு ஆட்சேபம் எழுப்பினார். கார்கே பேசியதாவது: இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியைக் கலந்தாலோசிக்கும் உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை. மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் இல்லை என்பதால் என்னிடம் அவைத் தலைவர் கலந்தாலோசிக்காமல் இருந்திருக்கலாம்.
ஆனால், அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் இல்லாதபட்சத்தில், சிபிஐ போன்ற அதிகாரிகளின் நியமனத்தில் தனிப்பெரும் எதிர்க்கட்சித் தலைவரைக் கலந்தாலோசிக்கும் வகையில் சட்டங்களை அரசு திருத்தியுள்ளது. உத்தரப்பிரதேச பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மக்களவைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கு நியமனம் செய்ய மக்களவைச் செயலகத்தில் உள்ள எந்த அதிகாரிக்கும் தகுதி இல்லையா? என்று கார்கே கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் ""அனூப் மிஸ்ராவின் நியமனம் என்பது நான் எடுத்த முடிவாகும். இந்த விவகாரம் குறித்து கார்கேவுடன் எனது அறையில் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். இது குறித்து விவாதிக்க, இந்த அவை உரிய இடம் அல்ல'' என்றார்.