திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி நடப்பது ஏன்? என்பது குறித்து கோவில் குருக்கள் விளக்கம் அளித்துள்ளார்.
சனிப்பெயர்ச்சி திருவிழா
காரைக்காலை சேர்ந்த திருநள்ளாறில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலான தர்பாரண்யேஸ்வரசுவாமி கோவில் உள்ளது. இங்கு நவக்கிரகங்களுள் ஒன்றான சனிகிரகத்தின் அதிபதியாகிய சனிபகவான், ஈஸ்வர பட்டத்துடன், தனியாக சன்னதி கொண்டு கிழக்கு நோக்கிய நிலையில் அபயஹஸ்த முத்திரையுடன் அனுக்கிரக மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இத்தலமானது சனிதோஷ நிவர்த்திக்கு பிரசித்தி பெற்று விளங்குகிறது. வருகிற 16-ந்தேதி இங்குசனிப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெறுகிறது.
லட்சக்கணக்கான பக்தர்கள்
சனிப்பெயர்ச்சி விழாவின்போது சனி பகவானை தரிசனம் செய்வதற்காக காரைக்கால் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சனிப்பெயர்ச்சி விழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் கோவில் நிர்வாகம் சார்பில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி நளதீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் மற்றும் பிரம்மதீர்த்தக் குளங்கள் தூர்வாரப்பட்டு புதிதாக தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் கோவிலுக்குள் வரிசையாக செல்லவும், குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றுவிடாதபடி தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருநள்ளாறு முழுவதும் கோலாகலமாக காணப்படுகிறது.
3 ஆண்டுகளுக்கு பிறகு...
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி, இந்த முறை 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. இது ஏன்? என்று கோவில் குருக்கள் ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவது இங்கு ‘சனிப் பெயர்ச்சி விழா’வாக வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 21.12.2011 அன்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவின்போது சனிபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
அதிசார வர்க்க நிவர்த்தி காலம்
அதனை தொடர்ந்து வருகிற 16-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடை பெறுகிறது. அன்றைய தினம் சனிபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
கடந்த சனிப் பெயர்ச்சியின்போது அதிசார வர்க்க நிவர்த்தி காலத்தில் சனிபகவான் துலாம் ராசியில் 6 மாத காலம் கூடுதலாக இருந்துள்ளார்.
அதனால்தான் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுது சனிப் பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. கடந்த முறை போன்று இந்த முறையும் சனிபகவான் விருச்சிக ராசியில் சுமார் 3 ஆண்டுகளுக்கு இருப்பார். அடுத்த சனிப்பெயர்ச்சி விழாவானது 19.12.2017 அன்று நடைபெறும். அப்பொழுது சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைவார்.
இவ்வாறு கோவில் குருக்கள் தெரிவித்தார்.