தமிழகத்தில் தனியார் பால், தயிர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய விலை உயர்வு திங்கள்கிழமை (நவ.10) முதல் அமலுக்கு வருவதாக தனியார் பால் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: அண்மையில் ஆவின் பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, நவம்பர் 6-ஆம் தேதி முதல், தமிழகத்திலிருந்து வரும் ஆரோக்யா, கெவின்ஸ் பால் நிறுவனங்கள் தங்களின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தின. ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் 4 முன்னணி தனியார் பால் நிறுவனங்களில், திருமலா, ஹெரிடேஜ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.4-ம், டோட்லா, ஜெர்சி ஆகிய இரண்டு நிறுவனங்கள் லிட்டருக்கு வகைக்கு ஏற்ப ரூ.2 முதல் ரூ.4 வரையும் விற்பனை விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. புதிய விலை உயர்வு திங்கள்கிழமை (நவ.10) முதல் அமலுக்கு வருகிறது.
அதேபோல், கப் தயிர் விலை, வகைக்கு ஏற்ப ரூ.1 முதல் ரூ.2 வரை உயர்த்தப்படுகிறது. ஒரு கிலோ தயிர், வகைக்கு ஏற்ப ரூ.17-லிருந்து, ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பாக்கெட் தயிர் விலையையும் கிலோவுக்கு ரூ.2 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. தனியார் நிறுவனங்கள் நிகழாண்டில் இதுவரை நான்கு முறை பால் விலையை உயர்த்தியுள்ளன. தற்போது, ஐந்தாவது முறையாக விற்பனை விலை உயர்த்தப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 10 முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தன்னிச்சையாக செயல்படும் தனியார் பால் நிறுவனங்களின் இந்தச் செயல் கடும் கண்டனத்துக்குரியது. அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். தொடர்ந்து உயர்த்தப்படும் பால் விலையால் பாதிக்கப்படுவது பொதுமக்களும், முகவர்களுமே. ஆகையால், தமிழக அரசு இந்தப் பிரச்னையில் தலையிட்டு, தனியார் பால் விலையையும் அரசே நிர்ணயம் செய்யும் வகையில் உடனே சட்டம் இயற்ற முன்வர வேண்டும் என்றார் பொன்னுசாமி.