முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தமிழக அரசு 152 அடியாக உயர்த்தியே தீரும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபடத் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி "செயல்படுகிற ஆட்சி சீக்கிரம் வருமா?' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அவருக்குப் பதிலளிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் திமுக அங்கம் வகித்த முந்தைய மத்திய அரசும், திமுகவும் தொடர்ந்து துரோகம் இழைத்ததை தமிழக மக்கள் மறந்துவிடவோ, மன்னித்துவிடவோ இல்லை. தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்றவுடன் அவர் எடுத்த திடமான உறுதியான நடவடிக்கைகள் காரணமாக, அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என, 07.05.2014 அன்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
தீர்ப்பில், மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுக் கூட்டத்தில், நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த ஜூலை 17-ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினமே அணை மதகுகளின் கதவுகள் கீழிறக்கப்பட்டன. நவம்பர் 8-ஆம் தேதி நிலவரப்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.40 அடியாகவும், அணையிலிருந்து வெளியேற்றும் நீரின் அளவு நொடிக்கு 456 கன அடியாகவும் இருந்தது. பெரியாறு அணைப் பாசனம், வைகை அணைப் பாசனப் பகுதிகளுக்கு நீர் அளிப்பதற்காக அணைகளிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. வைகை அணையில் நவம்பர் 1-ஆம் தேதி 2.4 டி.எம்.சி. நீர் மட்டுமே இருந்தது. அணைக்கு நீர்வரத்து குறைந்தும், நவம்பர் 3-ஆம் தேதி முதல் அதிகரித்தும், அதன்பிறகு மீண்டும் குறைந்தும் வந்தது.
எனவே, வைகை அணையின் பாசனதாரர்கள், பெரியாறு அணை பாசனதாரர்கள் ஆகியோருக்கு பாசனத்திற்கு நீர் வழங்குவதற்கு ஏதுவாக, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. பருவகால சூழ்நிலைக்கேற்பவும், அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்தைக் கருத்தில் கொண்டும், அணைகளிலிருந்து நீரை உரிய வகையில் பயன்படுத்த ஏதுவாக நீர் மேலாண்மை செய்யப்படுகிறது. எனவே, நீர் மேலாண்மை குறித்து குழப்பம் விளைவித்து அரசியல் ஆதாயம் தேட முற்படும் கருணாநிதியின் போக்கு கண்டிக்கத்தக்கது. 152 அடியாக உயர்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், கேரள அரசு மறுப்புத் தெரிவித்ததால் முடிக்கப்படாமல் உள்ள எஞ்சிய பணிகளை மத்திய நீர்வளக் குழுமத்திற்கு திருப்தி அளிக்கக் கூடிய வகையில் செய்து முடிக்கப்பட்ட பின்னர், தனிப்பட்ட வல்லுநர்கள் ஆய்வு செய்து அணையின் நீர்மட்டத்தை 152 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் எனவும், அதிகாரம் படைத்த குழு மேலும் சில பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில், 142 அடிக்கு மேலாக அணையின் உச்ச நீர் மட்ட அளவான 152 அடி வரையில் நீரைத் தேக்கி வைப்பதற்காக தமிழ்நாடு செய்ய உள்ள வலுப்படுத்தும் பணிகள் பற்றிய விவரங்கள் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டது.
இப்போது அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், வடகிழக்குப் பருவ மழைக்காலம் முடிந்த பின்னர், கோடை காலத்தில்தான் அணையைப் பலப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு செய்து முடிக்க முடியும். தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தியே தீரும். முல்லைப் பெரியாறு பிரச்னையில் கருணாநிதி எந்தவித கவலையும் கொள்ளத் தேவையில்லை. அமராவதி ஆற்றின் கிளை நதியான பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு பட்டிசேரி என்னுமிடத்தில் அணை கட்டப்போவதாக செய்திகள் வந்ததையடுத்து, தேவையான நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. தமிழக அரசின் இசைவு பெறாமலும், காவிரி மேலாண்மை வாரியத்தின் ஒப்புதல் பெறாமலும், கேரள அரசு பாம்பாற்றின் குறுக்கே எந்தவொரு அணை கட்டும் பணியையும் மேற்கொள்ளக் கூடாது என அறிவுரை வழங்குமாறும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று கோரியும் பிரதமருக்கு கடந்த 8-ஆம் தேதி கடிதம் எழுதினேன். காவிரிப் பிரச்னையை உள்ளடக்கிய பாம்பாறு, பவானி ஆறு போன்ற பிரச்னைகளில் கேரள அரசு புதிய அணை கட்ட மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையையும் தடுக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.