2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கின் இறுதி வாதங்கள் திங்கள்கிழமை (நவம்பர் 10) தொடங்குமா அல்லது வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கில் சிபிஐ வழக்குரைஞராக அண்மையில் நியமிக்கப்பட்ட ஆனந்த் குரோவர், வழக்கு தொடர்பான ஆவணங்களையும், குற்றம்சாட்டப்பட்டோர் முன் வைத்த சாட்சியங்களையும் தொடர்ந்து படித்து வருவதால், அவற்றின் மீது தனது வாதங்களை முன்வைக்க சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனியிடம் கூடுதல் அவகாசம் கேட்கக்கூடும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில், இந்த வழக்கின் சிபிஐ தரப்பு கூடுதல் சாட்சிகளாக மத்திய அமலாக்கத் துறை துணை இயக்குநர் சத்யேந்திர சிங், மத்திய தகவல் ஒலிப்பரப்புத் துறை உதவிச் செயலர் நவில் கபூர், தனியார் வங்கி அலுவலர் டி. மணி, கலைஞர் டிவி பொது மேலாளர் ஜி. ராஜேந்திரன் ஆகியோரை விசாரிக்க அனுமதி கேட்டு கடந்த செப்டம்பரில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீது கடந்த அக்டோபரில் சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி விசாரணை நடத்தினார். அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் சிபிஐ மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இருப்பினும், இந்த மனு மீதான விசாரணையை திங்கள்கிழமைக்கு (நவம்பர் 10) ஒத்திவைத்தார். எனவே, 2ஜி அலைக்கற்றை வழக்கின் இறுதி வாதங்கள் திங்கள்கிழமை தொடங்காவிட்டாலும், கூடுதல் சாட்சிகளை விசாரிக்க அனுமதி கோரியுள்ள சிபிஐ மனு மீது சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவு பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று ஆண்டுகளாகத் தொடரும் வழக்கு: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கில், மத்திய முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுரா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத் குமார் ரெட்டி உள்பட 14 பேர் மீதும், மூன்று நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
182 பேரிடம் சாட்சியம் பதிவு: இந்த வழக்கில் 2011, அக்டோபர் 22-ஆம் தேதி மேற்கண்ட 17 பேர் மீதும் சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, 2011, நவம்பர் 11-ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்த ரிலையன்ஸ் ஏடிஏஜி நிறுவனத் தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்பட 153 பேரிடமும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 29 பேரிடமும் இதுவரை சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளுடன் சிபிஐயும், குற்றம்சாட்டப்பட்டவர்களும் அவ்வப்போது தாக்கல் செய்த சுமார் 1,150 மனுக்களை சிபிஐ நீதிமன்றம் விசாரித்துள்ளது. அமலாக்கத் துறை வழக்கு: சிபிஐ தொடர்ந்த வழக்கு நீங்கலாக இதே விவகாரத்தில் நடைபெற்ற சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ஆ. ராசா, ஷாஹித் உஸ்மான் பால்வா, சரத் குமார் ரெட்டி, தயாளு அம்மாள், கனிமொழி, பி. அமிர்தம் உள்பட 10 பேர் மீதும், ஸ்வான் டெலிகாம், கலைஞர் டிவி உள்பட 9 நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டப்பட்டுள்ளது.
இறுதி வாதங்கள் முடிவடைந்ததும், 2011-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்புடைய சிபிஐ வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் எனத் தெரிகிறது.