பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையை ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்தார். மத்திய அமைச்சரவையில் புதிதாக 21 பேர் சேர்க்கப்பட்டனர். இவர்களில், 4 பேர் கேபினட் அமைச்சர்கள்; மூவர் தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள். எஞ்சிய 14 பேர் இணையமைச்சர்கள் ஆவர். இந்த விரிவாக்கத்தையடுத்து, மோடி அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது. இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியை சிவசேனைக் கட்சி கடைசி நேரத்தில் புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய மத்திய அமைச்சர்கள் 21 பேருக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்றுக் கொண்டவர்களில், பாஜக மூத்த தலைவர்கள் மனோகர் பாரிக்கர், ஜே.பி. நட்டா, சௌத்ரி வீரேந்தர் சிங், சிவசேனையில் இருந்து பாஜகவில் ஞாயிற்றுக்கிழமை சேர்ந்த சுரேஷ் பிரபு ஆகிய 4 பேர் கேபினட் அமைச்சர்கள். பாஜக மூத்த தலைவர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ராஜீவ் பிரதாப் ரூடி, மகேஷ் சர்மா ஆகிய 3 பேரும் தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள்.
பாஜகவைச் சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வி, ராம் கிருபால் யாதவ், ஹரிபாய் பார்திபாய் சௌத்ரி, சோன்வார் லால் ஜாட், மோகன்பாய் குண்டாரியா, கிரிராஜ் சிங், ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், ராம் சங்கர் கதேரியா, ராஜ்ய வர்தன் சிங் ரத்தோர், பாபுல் சுப்ரியா, ஜெயந்த் சின்ஹா, சாத்வி நிரஞ்சன் ஜோதி, விஜய் சாம்ப்லா ஆகிய 13 பேர் இணையமைச்சர்கள். இவர்களுடன் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஒய்.எஸ். சௌதரியும் மத்திய இணையமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர் அமீத் ஷா, மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் வசுந்தரா ராஜே சிந்தியா (ராஜஸ்தான்), ரமண் சிங் (சத்தீஸ்கர்), மனோகர் லால் கட்டார் (ஹரியாணா), தேவேந்திர பட்னவீஸ் (மகாராஷ்டிரம்), தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் பங்கேற்கவில்லை: நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை. இதுகுறித்து மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், "காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது' என்றார். ஆனால், நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடர்பாக அவர்களிடம் இருந்து தகவல் வந்ததா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
அதேசமயம், எதிர்க்கட்சி வரிசையில் சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் கலந்து கொண்டார். மற்ற எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் யாரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
19 பேர் ஹிந்தியில் பதவியேற்பு: தெலுங்கு தேசத்தை சேர்ந்த ஒய்.எஸ். சௌதரி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. பாபுல் சுப்ரியா ஆகிய 2 பேரைத் தவிர, மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்ற 19 பேரும் ஹிந்தியில் பதவியேற்றனர். சௌதரியும், சுப்ரியாவும் ஆங்கிலத்தில் பதவியேற்றனர்.
மத்திய அமைச்சர் வீரேந்திர சிங், பதவி, அலுவலகத்தின் கௌரவத்தை காப்பேன் என்று பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். மனோகர் பாரிக்கர், முக்தார் அப்பாஸ் நக்வி, பண்டாரு தத்தாத்ரேயா, ராஜீவ் பிரதாப் ரூடி, மகேஷ் சர்மா உள்ளிட்டோர் கடவுளின் பெயரால் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
அமைச்சர்களின் எண்ணிக்கை 66ஆக உயர்வு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்தியில் கடந்த மே மாதம் பாஜக அரசு அமைந்த பிறகு மத்திய அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட முதல் விரிவாக்கம் இதுவாகும். மத்திய அமைச்சரவையில் புதிதாக 21 பேர் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை 45-லிருந்து 66ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், பிரதமர் நரேந்திர மோடி உள்பட 27 பேர் கேபினட் அந்தஸ்து உடையவர்கள். 13 பேர் தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், 26 பேர் இணையமைச்சர்கள். இதேபோல மத்திய அமைச்சரவையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் எம்.பி. சாத்வி நிரஞ்சன் ஜோதி பதவியேற்றதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் பெண்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.புதிய அமைச்சர்களுக்கு மோடி விருந்து: முன்னதாக, புதிதாக மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றவர்களுக்கு, தில்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி விருந்து அளித்தார்.
கடைசி நேரத்தில் சிவசேனை புறக்கணிப்பு: மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, புதிதாகச் சேர்ப்பதற்கு 2 எம்.பி.க்களின் பெயர்களைப் பரிந்துரை செய்யுமாறு சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் மோடி கேட்டிருந்தார். இதையேற்று, சிவசேனையைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அனில் தேசாயின் பெயரை அவர் பரிந்துரை செய்திருந்தார். அதன்படி, மத்திய அமைச்சராகப் பதவியேற்பதற்காக தில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை அனில் தேசாய் வந்தார். ஆனால், கடைசி நேரத்தில் தில்லியில் இருந்து மும்பைக்கு அவர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். மகாராஷ்டிர அரசில் சேருவது தொடர்பாக பாஜகவுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.மனோகர் பாரிக்கர் உள்பட 4 பேருக்கு கேபினட் அந்தஸ்து மோடி அமைச்சரவையின் எண்ணிக்கை 66ஆக உயர்வு கடைசி நேரத்தில் விழாவை புறக்கணித்தது சிவசேனை
இன்று அமைச்சரவைக் கூட்டம்
மத்திய அமைச்சரவை விரிவாக்கத்துக்குப் பிறகு, தில்லியில் முதல்முறையாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை (நவ.10) நடைபெறுகிறது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தில்லியில் அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, அனைத்து அமைச்சர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது' என்றன. அளவில் சிறியது: மோடி தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 66ஆக உயர்ந்தபோதிலும், முந்தைய வாஜ்பாய் அமைச்சரவை (88 அமைச்சர்கள்), ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையைக் (78 அமைச்சர்கள்) காட்டிலும் அளவில் சிறியதாகும்.