வேர்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்து தான். இதனால் உடல் பருமன் கூடும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வரும் என்ற நம்பிக்கை தான் இருந்து வருகின்றது. ஆனால் வருகின்ற ஆராய்ச்சிகளில் இந்த நம்பிக்கைகளுக்கு எந்த ஒரு ஆதாரமுமில்லை என்றே தெரிகிறது. காரணம் வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்ற படியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவாகும். ஏனெனில் இதிலுள்ள சர்க்கரையின் அளவு இரத்தத்தில் மிக மிக குறைந்த அளவே சேருவதால் பயமில்லாமல் சாப்பிடலாம். மேலும் இதில் இருக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருள் இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ஆகவே இவர்கள் அன்றாட உணவில் தைரியமாக வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம்.
வேர்கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக காணப்படுவதால் வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது. மாறாக ரத்த கொதிப்பு குறையும். வேர்கடலையில் நைட்ரிக் அமிலம் என்ற வேதிப் பொருள் உள்ளது. இவை வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் இதில் காணப்படும் ஆன்ட்டி ஆக்ஸடென்ட்ஸ் போன்ற உயிர் வேதிப் பொருட்கள் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் உருவாக்காமல் தடுக்கிறது. வேர்க்கடலை நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் வேர்கடலை சாப்பிட்டால் மலசிக்கல் ஏற்படாது. ஆகவே கர்ப்பிணிகள் கூட வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது.
வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் தான் நிறையச் சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவதால் சிலருக்கு ஏற்படும் அஜீரணத்தை தவிர்க்கலாம்.
பொதுவாக உடல எடையை குறைப்பவர்கள் நொறுக்கு தீணிக்கு பதிலாக வேர்க்கடலையை சாப்பிடலாம், ஏனெனில் இவை சாப்பிட்ட திருப்தி விரைவிலேயே கிடைப்பதால் மேலும் மேலும் எதையாவது சாப்பிட்டு உடல் எடையை கூட்டும் நிலை வராது. ஆனாலும் இதில் உடல் எடையைக் கூட்டும் புரத சத்து அதிகமிருப்பதால் அளவோடு சாப்பிடவது தான் இவர்களுக்கு நல்லது. இதிலுள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் முதுமையில் ஏற்படும் ஆஸடியொபோராசிஸ் என்ற எலும்பு சம்பந்தமான நோயையும் தடுக்க உதவுகிறது.