மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் (சென்செக்ஸ்) புதன்கிழமை முதல்முறையாக 28,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது. புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாலும், மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளதாலும் தொழில் துறையினர் உற்சாகமடைந்துள்ளதால், பங்கு வர்த்தகம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பணியாளர் சட்டம், நிலம் கையகப்படுத்துதல் சட்டம், காப்பீட்டுச் சட்டம் ஆகியவற்றில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என்று, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை அறிவித்தார்.
மேலும், நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத் துறை நிறுவனங்கள் சிலவற்றை தனியார்மயமாக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது, தொழில் துறையினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை காலை 27,907 புள்ளிகளுடன் தொடங்கிய மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண், ஒரு கட்டத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக 28,010 புள்ளிகளைத் தொட்டது.இருப்பினும் வர்த்தக முடிவில், சாதனை அளவாக 27,915 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இது, முந்தைய தினத்தைவிட 55.5 புள்ளிகள் (0.20 சதவீதம்) அதிகமாகும்.