ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் வீட்டுக்கு வெளியே திங்கள்கிழமை காவலுக்கு நின்று கொண்டிருந்த வீரர் "தவறுதலாக' துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: ஸ்ரீநகரில் குப்கர் சாலையில் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் வீட்டின் வெளியே காவல் பணியில் ஈடுபட்டிருந்த குணால் கோஷ் என்பவர் தவறுதலாக தனது துப்பாக்கியை வெடிக்கச் செய்துவிட்டார்.
இதுகுறித்து குணால் கோஷிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர் பல்வேறு விஷயங்களில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். இந்தச் சம்பவம் நடைபெற்றபோது முதல்வர் ஒமர் அப்துல்லா, தேர்தல் பிரசாரத்துக்காக வெளியே சென்றிருந்தார். இதுகுறித்து ஒமர் தனது சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்ட பதிவில், "எனக்குப் பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகள் மீது நான் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.