உலக அளவில் சிறந்த முடிவெடுப்போர் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். இதுதொடர்பாக அமெரிக்காவின் முன்னணி வெளிநாட்டுக் கொள்கை பத்திரிகை வெளியிட்டுள்ள "100 உலக சிந்தனையாளர்கள்' பட்டியலில், "சிறந்த முடிவெடுப்போர்' பிரிவில்,உலக அளவில் மோடி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, 2-ஆவது இடத்தில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலும். 3-ஆவது இடத்தில் பாஜக தலைவர் அமித் ஷாவும் உள்ளனர்.மோடி குறித்து அந்தப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: "மோடி வசீகரமானவர், வர்த்தகத்துக்கு சாதகமான தலைவர். அவரது பேச்சைக் கேட்க பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரள்கின்றனர். அவரது பேச்சு, 3டி தொழில்நுட்பம் மூலம் லட்சக்கணக்கானோரை சென்றடைகிறது' எனத் ரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அமித் ஷா குறித்து அந்த பத்திரிகையில், "உத்தரப் பிரதேசத்தில் மிகப் பெரிய பிரசார இயந்திரத்தை கட்டமைத்தவர். தேர்தல்களில் பாஜகவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, சிஜிநெட் ஸ்வாரா நிறுவனர் சுப்ரான்சு சௌதரி, செய்தி வாசிப்பாளர் பத்மினி பிரகாஷ், இந்திய தேசிய போலியோ ப்ளஸ் கமிட்டி தலைவர் தீபக் கபூர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளரும், மருத்துவருமான சங்கீதா பாட்யா, விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதன், பொருளாதார நிபுணர் பார்தா தாஸ்குப்தா ஆகியோரும் உலக சிந்தனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.