ரஷியாவுடன் முழுமையான போருக்குத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ கூறினார்.உக்ரைனில், கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து போரிடுவதற்காக ரஷியாவிலிருந்து அணி அணியாக படைவீரர்கள் அனுப்பப்படுவதாக உக்ரைன் கடந்த வாரம் புகார் கூறியிருந்தது.இந்நிலையில் உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ, ஜெர்மனியிலிருந்து வெளியாகும் "பில்ட்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:ரஷிய படையுடன் போரிடுவதற்கு நாங்கள் துளியும் அஞ்சவில்லை. அந்த நாட்டுடன் முழுமையான போரை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளோம்.
நாங்கள் அமைதியைத்தான் விரும்புகிறோம்: ஆனால், ரஷியா எந்த அமைதி ஒப்பந்தத்தையும் மதிப்பதாகத் தெரியவில்லை.கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு போதுமான வலிமை எங்களிடம் உள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது அதிக வலுவுடன் உள்ளோம். உலகம் முழுவதும் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது என்றார் பொரொஷென்கோ. ஐ.நா. புள்ளிவிவரப்படி, ரஷிய ஆதரவுப் பகுதியான கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படையினருக்கும் ஏழு மாதங்களாக நடைபெற்ற சண்டையில் 4,100 பேர் உயிரிழந்தனர். அங்கு தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளதால், பெரும்பாலான போர் முனைகளில் சண்டை ஓய்ந்துள்ளது. எனினும், முக்கியத்துவம் வாய்ந்த சண்டைப் பகுதிகளில் இருதரப்பினருக்கும் இடையே பரஸ்பர தொலைதூரக் குண்டுவீச்சுத் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.