"நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறவும்,ஆக்கப்பூர்வமாக விவாதித்து பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு வழங்குவர்' என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை, நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியபோது, இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: ""நாட்டு மக்கள் எங்களுக்கு (ஆளும் கட்சிக்கு) அரசை நடத்துவதற்கான பொறுப்பை அளித்துள்ளார்கள். அதேபோல்,தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் பல்வேறு கட்சியினர் உள்பட அனைவருக்கும், நாட்டை வழிநடத்துவதற்கான பொறுப்பையும் மக்கள் வழங்கியுள்ளார்கள். நாடாளுமன்றத்தில், நாட்டு மக்களின் மேம்பாட்டுக்கான பல்வேறு நற்செயல்கள், இதமான சூழ்நிலையில், இதமான மனநிலையில் எடுக்கப்படும் என நான் நம்புகிறேன். ஆகையால், இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடர் பயனுள்ளதாகவும், பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு காணும் வகையிலும் அமையும் எனக் கருதுகிறேன்.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சியினரின் ஆக்கப்பூர்வமான பங்கேற்பு காரணமாக, நல்லவிதத்தில் பணிகளை ஆற்ற முடிந்தது. இந்தக் கூட்டத்தொடரிலும் அதுபோன்ற அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன்'' என்று பிரதமர் மோடி கூறினார். காப்பீட்டு மசோதா உள்ளிட்ட பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்க்கவும் கருப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் பல்வேறு எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில், பிரதமரின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கூட்டத்தொடரைத் தொடங்குவதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிய போது, அனைத்து முக்கியப் பிரச்னைகளும் ஒருமித்த நோக்கில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்க்கட்சிகளுக்கு உறுதி அளித்ததுடன், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரைப்போல இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரும் சுமுகமாக நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
எதிர்க்கட்சிகள் வியூகம்: அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்புக்கு வழிவகுக்கும் காப்பீட்டு மசோதாவைப் பொருத்தவரை, இடதுசாரிக் கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதிக் கட்சி, பகுஜன் சமாஜ் ஆகிய எதிர்க் கட்சிகள் பெரிய கூட்டணியாக ஒன்றுசேர்ந்து அதனை எதிர்க்க முடிவு செய்துள்ளன. இந்தக் கூட்டணியில் சேருமாறு அக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளபோதிலும்,காங்கிரஸ் இதுவரை பிடிகொடுக்கவில்லை. காப்பீட்டு மசோதாவில் என்ன திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதைப் பார்த்தபிறகுதான், அதுபற்றி முடிவெடுக்க முடியும் என மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.