தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 4-ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு பேரவையைக் கூட்ட தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான அறிவிக்கையை சட்டப்பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் திங்கள்கிழமை வெளியிட்டார். அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 174 (1)-ன் கீழ், சட்டப்பேரவையின் கூட்டத்தை டிசம்பர் 4-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆளுநர் கே.ரோசய்யா கூட்டியுள்ளார். தலைமைச் செயலகத்திலுள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை நாள்கள் நடைபெறும்? ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டப்பேரவை குறுகிய கால அளவில் (குறைந்தது ஒரு வாரம்) கூடுவது வழக்கம். கடந்த 2012-ஆம் ஆண்டு ஐந்து நாள்களும், 2013-ஆம் ஆண்டு 6 நாள்களும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்கள் நடைபெற்றுள்ளன.
இந்த நிலையில், வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கூட்டத் தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது குறித்து சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் குழு முடிவெடுக்கும் எனத் தெரிகிறது. இந்தக் குழுவில் பேரவையிலுள்ள அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உறுப்பினர்களாக உள்ளனர். பேரவை கூடும் தினமான டிசம்பர் 4-ஆம் தேதி காலையில் அலுவல் ஆய்வுக் குழு கூடும் எனவும், பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என அப்போது முடிவு செய்யப்படும் என்றும் பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன. முக்கியப் பிரச்னைகளும், பிரதானத் தீர்மானங்களும்: தமிழக சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டுமென திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பேரவையை எப்போது கூட்ட வேண்டுமென தமிழக அரசுக்குத் தெரியும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டு முறை தனது அறிக்கைகளின் வாயிலாக பதிலளித்திருந்தார்.
இந்த நிலையில், சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கான அறிவிப்பை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா வெளியிட்டுள்ளார். இந்தக் கூட்டத் தொடரின் போது பல முக்கிய பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் எனத் தெரிகிறது. பருப்பு, முட்டை கொள்முதல், தருமபுரியில் குழந்தைகள் இறப்பு, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை, காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டும் விவகாரம், சட்டம்- ஒழுங்கு பிரச்னை, யூரியா தட்டுப்பாடு என பல முக்கிய பிரச்னைகளை பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் எனத் தெரிகிறது. இந்தப் பிரச்னைகளுக்கு ஏற்கெனவே அரசின் சார்பிலும், அமைச்சர்களின் தரப்பிலும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பிரச்னையை எழுப்பும் போது, அரசுத் தரப்பிலும் போதிய பதில்கள் விளக்கமாகத் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், நதிநீர் பிரச்னைகளில் சில முக்கியத் தீர்மானங்கள் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக அரசுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் இந்தக் கூட்டத் தொடர் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.