குடும்ப அட்டைகளின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கும் (2015-ஆம் ஆண்டு) வகையில், உள்தாள்களை ஒட்ட தமிழக அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உணவுத் துறை வெளியிட்ட அறிவிப்பு: புதிய குடும்ப அட்டைகளை வழங்கவும், போலி குடும்ப அட்டைகளைக் களையவும், கணினி மயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயோ-மெட்ரிக் அடிப்படையில் குடும்ப அட்டைகளை வழங்குவதற்காக, இதுவரை தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்படி, 5 கோடியே 87 ஆயிரத்து 395 பேருக்கு உடற்கூறு பதிவுகளைச் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 4 கோடியே 71 லட்சத்து 75 ஆயிரத்து 490 நபர்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இப்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளை வரும் ஆண்டுக்கும் (2015) புதுப்பிக்கும் வகையில் உள்தாள்கள் அச்சிடப்பட்டு, குடும்ப அட்டையில் இணைக்கப்படும். அதன்படி குடும்ப அட்டையின் செல்லத்தக்க காலம் 2015-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை இருக்கும்.
எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள் கணினி மூலம் புதுப்பித்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்கள்: நடப்பு சம்பா நெல் கொள்முதல் பருவத்தில் இதுவரை 167 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 4 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அறுவடையை முழுவீச்சில் தொடங்குவதற்கு முன்பாக விவசாயிகளின் தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 612 நபர்கள் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில், உணவுத் துறைச் செயலாளர் எம்.பி.நிர்மலா, உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் சூ.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.