2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம் தொடர்புடைய, மத்திய அமலாக்கத் துறை வழக்கில், சில தனியார் நிறுவனங்களுக்கும் கலைஞர் டிவிக்கும் இடையே நடைபெற்ற ரூ. 200 கோடி அளவிலான பணப் பரிவர்த்தனை தொடர்புடைய சொத்துகளை முடக்கியது குறித்து தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை துணை இயக்குநராக இருந்த பிரபாகாந்த் திங்கள்கிழமை சாட்சியம் அளித்தார். இவர் தற்போது நேரு யுவ கேந்த்ராவின் தலைமை இயக்குநராக பணியாற்றி வருகிறார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்புடைய மத்திய அமலாக்கத் துறை வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் கடந்த வாரம் முதல் சாட்சியம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. இதையொட்டி, அத்துறையின் இணை இயக்குநர் ஹிமான்ஷு குமார் லாலின் சாட்சியம் கடந்த வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, துணை இயக்குநராக இருந்த பிரபாகாந்த் சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் திங்கள்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
சொத்துகள் ஏன் முடக்கம்: அவரிடம் மத்திய அமலாக்கத் துறையின் வழக்குரைஞர் என்.கே. மட்டா, "இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களின் சொத்துகளை முடக்க ஏன் நடவடிக்கை எடுத்தீர்கள்?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பிரபாகாந்த் அளித்த பதில்: "சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை அடிப்படையில் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகளான ராஜேஷ்வர் சிங் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் இந்த வழக்கில் பணப் பரிவர்த்தனையில் மோசடி நடந்தது தொடர்பாக விசாரணையை நடத்தினர். இந்த வழக்கின் சாட்சிகள், ஆவணங்கள், விசாரணைக்கு வரும் சாட்சிகள் நடத்தப்படும் விதம் உள்ளிட்டவை தொடர்பாக நான் மேற்பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்குவேன். சாட்சிகள் தெரிவித்த வாக்குமூலங்களின் உண்மைத்தன்மை தொடர்பாகவும் நான் ஆராய்ந்தேன்.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டைனாமிக்ஸ் ரியாலிட்டி, குசேகான் ஃப்ரூட்ஸ் அன்ட் வெஜிடேபிள்ஸ், சினியூக் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் குறைந்த ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டு வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், இவற்றின் தொழிலுக்கு சம்பந்தமே இல்லாத கலைஞர் டிவிக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளன. அதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லாதபோதுதான் அந்த நிறுவனங்களுக்கும் கலைஞர் டிவிக்கும் இடையிலான பணப் பரிவர்த்தனையில் சந்தேகம் எழுந்தது. அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில்தான், ஸ்வான் டெலிகாம் நிறுவனம் இந்த தனியார் நிறுவனங்கள் மூலம் சுமார் ரூ. 200 கோடி அளவுக்கு கலைஞர் டிவிக்கு அளித்ததை கண்டுபிடித்தோம். இந்த பணப் பரிவர்த்தனையை கடன் தொகை என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் கலைஞர் டிவியும் கூறுகின்றன. ஆனால், இவ்வளவு பெரிய தொகையை அளித்ததற்கு எவ்வித ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் 2007-இல் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ராசா மீது சிபிஐ விசாரணையை தொடங்கியது. இதையடுத்த, சில நாள்களில் பணத்தை அளித்த அதே தனியார் நிறுவனங்களுக்கு கலைஞர் டிவி பணத்தை வட்டியுடன் சேர்த்து திருப்பிச் செலுத்தியது. இந்தப் பரிவர்த்தனை சட்டப்பூர்வமானது என காட்டிக் கொள்வதற்காக அனைத்து பரிவர்த்தனையும் வங்கிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், வாங்கிய ரூ. 200 கோடிக்கு வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ,233 கோடி அளவுக்கு கலைஞர் டிவி தொகையை திருப்பி அளித்தது. இதனால்தான் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டப்படி, மத்திய அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து ரூ. 200 கோடி அளவிலான சொத்துகளை முடக்கும் உத்தரவிலும் நான்தான் கையெழுத்திட்டேன்' என்றார் பிரபாகாந்த்.
அவரது சாட்சியத்தைப் பதிவு செய்து கொண்ட சிறப்பு நீதிபதி சைனி, பிரபாகாந்திடம் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் தரப்பில் செவ்வாய்க்கிழமை குறுக்கு விசாரணை நடத்த அனுமதி அளித்து வழக்கை ஒத்திவைத்தார்.