பறவைக் காய்ச்சல் நோய் எதிரொலி காரணமாக, கேரளத்தில் இருந்து கோழி மற்றும் அது தொடர்பான பொருள்களை தமிழகத்துக்குள் கொண்டு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டது. கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழை மாவட்டத்தில் கடந்த சில நாள்களில் சுமார் 17,000 வாத்துகள் இறந்துள்ளன. இந்த வாத்துகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இவை பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டு இறந்துள்ளன என்பதை மத்திய அரசால் உறுதி செய்யப்பட்டுள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதால், இந்த நோய் தமிழகத்துக்குப் பரவி விடாமல் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:-
1. நமது மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் நோய் எதுவும் இல்லை என்றாலும், இந்த நோய் எளிதில் பரவக்கூடியது என்பதால், கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் கோழிகள் மற்றும் கோழியினம் சம்பந்தப்பட்ட பொருட்களை மாநிலங்களுக்கு இடையிலான சோதனைச் சாவடிகள் மூலம் சோதனை செய்து தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படவேண்டும்.
2. இவற்றில் எல்லையில் திருப்பி அனுப்ப சோதனைச் சாவடிகளில் கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர், போக்குவரத்து ஆணையர், வணிகவரித் துறை ஆணையர் ஆகியோர் நடவடிக்கை எடுப்பார்கள்.
3. கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து வாகனங்கள் மீது தெளிப்பான் மூலம் கிருமிநாசினி தெளிக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு தேவையான தெளிப்பான், கிருமி நாசினிகள் கால்நடை நோய்ப் புலனாய்வுப் பிரிவில் போதுமான அளவு இருப்பில் உள்ளன.
4. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக கேரள மாநில எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படும்.
5. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 800 விரைவு செயலாக்கக் குழுக்கள் அமைக்கப்படும்.
6. தடுப்பு நடவடிக்கைப் பணிக்குத் தேவையான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், தெளிப்பான்கள், கிருமி நாசினிகள் போதிய அளவில் இருப்பு உள்ளது. இவை கூடுதலாக தேவைப்பட்டால், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் அவற்றை வழங்கும்.
7. கேரள மாநில எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் உள்ள கோழிச் சந்தைகள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்.
8. கோழி இனங்களின் உடல்நிலை குறித்த விவரம் நாள்தோறும் பெறப்பட்டு கண்காணிக்கப்படும்.
9. கேரள மாநிலத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் வாத்து மற்றும் கோழிமுட்டைகள் பெறப்பட்டிருந்தால், அதன் விபரம் சேகரிக்கப்பட்டு, அவற்றை முழுவதுமாக அழித்துப் புதைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
10. இடம் பெயரும் பறவைகளின் நடமாட்டத்தை பறவைகள் சரணாலயங்களில் தலைமை வனப் பாதுகாவலர் கண்காணிப்பார்.
11. கேரள மாநிலத்தில் நோய் முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் வரை கோழி மற்றும் கோழியினங்கள் சம்பந்தப்பட்ட பொருட்கள் ரயில் மூலம் கொண்டுவரப்படுவதை நிறுத்தும்படியும், தமிழ்நாட்டிற்குள் வரும் ரயில்களில் போதுமான அளவு கிருமிநாசினிகளைப் பயன்படுத்திச் சுத்தம் செய்யுமாறும் தென்னக ரயில்வே கேட்டுக் கொள்ளப்படும். கேரளத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் பறவைக்காய்ச்சல் நோய் பரவாமலிருக்க, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், அரசுத் துறை செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
24 மணி நேர கட்டுப்பாட்டு அறை :-
12. பறவைக் காய்ச்சல் நோய்த் தடுப்புக்காக, தமிழகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை மத்திய நோய் ஆய்வுக் கூடத்தில் இந்த கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 044-24339097, செல்போன் எண்: 9445032504.