நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளிக்கிடையே சிபிஐ இயக்குநர் தேர்வு தொடர்பான சட்டத்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. "அங்கீகரிக்கப்பட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இல்லாதபட்சத்தில், அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியின் தலைவரை சிபிஐ தேர்வுக் குழுவில் உறுப்பினராக நியமித்துக் கொள்ளலாம். மேலும், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட சிபிஐ இயக்குநரின் நியமனத்தை, போதிய உறுப்பினர்கள் இல்லை எனக் கூறி செல்லாததாக்கிவிட முடியாது' என்பன உள்ளிட்ட ஷரத்துகள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத காரணத்தால், இந்த சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு ஏற்படுத்தியது. கடும் அமளி: இந்நிலையில், மக்களவையில் இந்த மசோதாவை புதன்கிழமை மத்தியப் பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். "சிபிஐ இயக்குநர் தேர்வு நடைமுறைகளிலிருந்து காங்கிரûஸ விலக்கி வைப்பதற்காகவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இது காங்கிரûஸ இழிவுபடுத்தும் செயல்' என மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டினார். அரசின் இந்த மசோதா மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கு ஆதரவுத் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ், பிஜு ஜனதா தள உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.
"இந்த மசோதாவில் எந்த உள்நோக்கமும் இல்லை. சிபிஐ இயக்குநர் தேர்வு நடைமுறைகளை சுலபமாக்கும் வகையிலேயே இது உருவாக்கப்பட்டுள்ளது' என அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இதையடுத்து, கடும் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.