ஆயிரம் ஆண்டுகால தமிழர் வரலாற்றில் மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஆண்ட எத்தனையோ மன்னர்கள், பேரரசர்கள் உண்டு. தமிழனின் பெருமையாக அவர்கள் கட்டிய பல்லாயிரக்கணக்கான கோவில்களையும் மாட அரண்மனைகளையும், கொட்டாரங்களையும் நம்மால் காட்ட முடிகிறது. ஆனால் எனக்கு தெரிந்து மக்கள் நலனுக்காக மன்னர்கள் கட்டிய ஒரே ஒரு மருத்துவமனையையோ, கல்விக் கூடத்தையோ, ஆராய்ச்சி கூடத்தையோ, பயிற்சிக் கூடத்தையோ நம்மால் காட்ட முடியவில்லை.
மீனாக்ஷி அம்மன் கோவில் உலக அதிசயம், மகாபலிபுரம் சிற்பக் கலையின் உச்சம் என்று மார்தட்டும் நம்மால், அக்காலத்தில் பஞ்சத்திலும் பட்டினியிலும் செத்தவர்களுக்கு தொழில் கற்றுக் கொடுக்கவோ, அறியாமையை அகற்ற கல்வி கற்றுக் கொடுக்கவோ, பிணி தீர்க்கும் மருத்துவ வசதிக்கோ அரசர்கள் எந்த முயற்சியும் எடுக்கவே இல்லை. ஆயிரம் ஆண்டுகால கோவில் என்று பெருமையுடன் காட்டும் நம்மால் ஆயிரம் ஆண்டுகால கல்லூரி என்றோ, ஆயிரம் ஆண்டு கால மருத்துவமனை என்றோ காட்ட எதுவுமே இல்லை.
ஆனால் குடிக்கும் கூத்திற்கும் என்றும் ஆதரவு அளிக்கும் சமூகம் நம் தமிழ் சமூகம். கோவிலில் ஆடுபவர்களுக்கு கிராமத்தை எழுதி வைக்கும் பெருமை கொண்டது. அறிஞர்களும் அறிவியலாளர்களும், சிந்தனையாளர்களும் பட்டினியில் சாகும் போது ஆட்டக்காரர்களுக்கு அணி செய்து அழகு பார்த்த பரம்பரை நாம். அதனாலேயே அறிவும் அறிவியலும் சிந்தனையும் வளரவில்லை நம் சமூகத்தில். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்லிய வள்ளுவருக்கு பிறகு இரண்டாயிரம் வருடம் தேவைப்பட்டது பிறப்பால் மனிதன் சமம் என்று பெரியார் வந்து சுயமரியாதை சொல்லிகொடுக்க!!
சுயமரியாதை இல்லாத, அடிமை குணத்துடன், பிற்போக்கு எண்ணம் கொண்ட, குறுகிய எண்ணத்துடன், சுயநலம் மிக்க அடுத்தவனுக்கு என்ன நடந்தாலும் தான் நல்ல இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட, பொறாமையும் வஞ்சமும் கொண்ட, அறிவுசார் விசயங்களில் ஆர்வம் இல்லாத ஒரு இனமாகவே தமிழர் இனம் இருந்து வந்துள்ளது. விதிவிலக்குகள் இருக்கலாம். இன்றும் அவ்வாறே உள்ளது.
மழைநீரில் அடித்துச்செல்லப்பட்டு சிறுகுழந்தை கால்வாயில் விழுந்து இறந்தாலும் அஜித் விஜய் சண்டையே டுவிட்டர் ட்ரெண்டில் முன்னிலை வகிக்கிறது. வெப்சைட் நடத்துபவர்களிடையே ஒரு பேச்சு உண்டு. தமிழில் நடிகைகளை பற்றி நாலு வரி எழுதினால் போதும். வெற்றிகரமாக வெப்சைட் நடத்தலாம் என்று. முற்றிலும் உண்மை. உலகத்தை பற்றி கவலைப்படாமல் இன்று நீ கூத்தில் கவனம் செலுத்தினால் நாளை உன் குழந்தை கால்வாயில் சாகும் போது பக்கத்து வீட்டில் எந்திரன் படம் பார்த்துக்கொண்டு இருப்பர்.
அறிவியலாளர்களும், மெத்தபடித்தவர்களும் வெளிநாடு செல்கின்றனர் என்றால், "கூமுட்டைகளே! உங்களோடு சேர்ந்து என்னையும் இது எந்த நடிகையின் தொப்புள் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட சொல்கிறீர்களா? நானாவது நானோ டெக்னாலஜி பற்றி ஆராய்கிறேன். உங்கள் பரம்பரையில் அறிவியலாளர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையை எனக்கு தெரியும்" என்று தான் அர்த்தம்.
புற நோயளியாக ஐம்பது ருபாய் கொடுக்க வக்கில்லாத தண்டம் எல்லாம் முன்னூறு ரூபாய்க்கு முதல் ஷோ பார்த்தால் உனக்கு எந்த முட்டாள் வைத்தியன் மருத்துவம் பார்ப்பான்? கூடங்குளம் வெடித்து எவன் செத்தால் என்ன, எனக்கு கரண்ட் வந்தால் போதும். யார் ஆட்சிக்கு வந்தால் என்ன டாஸ்மாக் போதும். புறணி பேச சினிமா கிசுகிசு போதும். சாலை வசதி, குடிநீர் வசதி, கல்வி வசதி போன்ற அடிப்படை உரிமைகளை கூட ஆட்சியாளர்களிடம் கேட்டு பெறமுடியாத பொறுக்கி தின்னிகள் தான் நாம்.
இந்நிலையில் அடுத்த மன்னனை தேட ஆரம்பித்து விட்டோம். ஆயிரம் ஆண்டு கழித்து ஐநூறு கோடி வசூல் செய்த படம் எங்கள் முதல்வர் நடித்தது என்று வரலாறு பேசும். நாமோ சிறு குழந்தைகளை கால்வாயிடமும், வளர்ந்த மூடர்களை டாஸ்மாக்கிடமும் பறிகொடுத்து, எப்போதும் மூடர்களாய் எழுபிறப்பும் அறிவிலிகளாய் இருப்போம். வாருங்கள் அடுத்த முதல்வரை இருட்டுக்குள் தேடுவோம்!!
வாருங்கள் அடுத்த முதல்வரை இருட்டுக்குள் தேடுவோம்!!
வாருங்கள் அடுத்த முதல்வரை இருட்டுக்குள் தேடுவோம்!!
வாருங்கள் அடுத்த முதல்வரை இருட்டுக்குள் தேடுவோம்!!
நன்றி