ஆந்திர மாநிலம் கம்மம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூளைக் காய்ச்சல் பாதித்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் 12 வயது சிறுமியின் கடைசி ஆசையை நடிகர் பவன் கல்யாண் நிறைவேற்றினார். 7-ம் வகுப்பு மாணவியான ஸ்ரீஜாவுக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் உள்ளார். அவர் பவன் கல்யாணின் ரசிகை. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு கூட, பவன் கல்யாணை பார்த்துவிட்டு வர வேண்டும் என்று தந்தையிடம் கூறியுள்ளார்.
தனது மகளின் ஆசை நிறைவேறாமலேயே போய்விடுமோ என்று கூறி கண்ணீர் விட்ட தந்தையின் குரல், விருப்பங்களை நிறைவேற்றும் அறக்கட்டளையின் காதுக்கு கேட்டது. உடனடியாக அவர்கள் பவன் கல்யாணை தொடர்பு கொண்டு சிறுமி குறித்து கூறி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். சுய நினைவை இழந்து படுக்கையில் இருந்த சிறுமியை பார்த்த பவன் கல்யாண், சிறுமியின் காதருகே சென்று நான் தான் பவன் கல்யாண் வந்திருக்கிறேன் என்று கூறினார். தனக்கு மிகவும் பிடித்த பவன் கல்யாண் தன்னருகே அமர்ந்திருந்த போதும், அது பற்றி உணர முடியாத நிலையில் தனது மகள் இருப்பதை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். சுமார் அரை மணி நேரம், சிறுமியுடன் இருந்த பவன் கல்யாண், மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்து, சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் வழங்கினார்.
மேலும், சிறுமி விரைவில் குணமடையே பிரார்த்திப்பதாகக் கூறி, வெள்ளியால் ஆன விநாயகர் சிலையையும், அவளது தந்தையிடம் பவன் கல்யாண் வழங்கினார்.