திருநெல்வேலி மாவட்டத்தில் நீடித்து வரும் மழையால் நெல், வாழைப்பயிர்கள் சேதமடைந்தன. சுமார் 5,000 ஏக்கரில் அறுவடை செய்யும் பருவத்தில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி மிதக்கின்றன. குலை வரும் பருவத்தில் சுமார் 100 ஏக்கரில் வாழைகள் சாய்ந்து சேதமடைந்திருப்பதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை நிலவரப்படி அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, கன்னடியன் அணைக்கட்டு பகுதி மற்றும் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி அணைகள் மற்றும் பாபநாசம் கீழ் அணைப் பகுதியில் பலத்த மழை பதிவாகியுள்ளது.
தாமிரவருணி பாசனத்தில் அறுவடை செய்யும் பருவத்தில் மழை நீடித்து வருவதால் வடக்கு கோடைமேலழகியான் கால்வாய் பாசனத்தில் விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், மன்னார்கோவில், நதியுன்னி கால்வாய் பாசனத்தில் அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, கோவில்குளம், பிரம்மதேசம், கெளதமபுரி உள்ளிட்ட பகுதியில் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி மிதக்கின்றன. மூன்று கால்வாய் நீர்பாசன சங்கத் தலைவர் ஆர். சிவகுருநாதன் கூறியதாவது: கார் பருவ சாகுபடிக்கு ஜூன் மாதத்தில் தண்ணீர் திறப்பது வழக்கம். நிகழ் பருவத்தில் பாசனத்திற்கு ஜூலை மாதம் 4 ஆம் தேதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் சாகுபடி பருவம் தாமதம் ஏற்பட்டு தற்போது பெய்து வரும் மழையில் அறுவடை பருவத்தில் நதியுன்னி, வடக்கு கோடைமேலழகியான் கால்வாய் பாசனத்தில் சுமார் 2,200 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. முறையான நீர் பங்கீடு இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார் அவர்.
இதேபோல் கன்னடியன் கால்வாய் பாசனத்தில் கல்லிடைக்குறிச்சி, வெள்ளங்குளி, வீரவநல்லூர், அரிகேசவநல்லூர், காருக்குறிச்சி, கூனியூர், சக்திகுளம், தெற்கு அரியநாயகிபுரம், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம், கொத்தன்குளம் பகுதியில் அறுவடை பருவத்தில் மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர். மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலர் ஆர். கசமுத்து கூறியதாவது: கடனாநதி அணைப் பாசனத்தில் ஆழ்வார்குறிச்சி, கீழஆம்பூர், சிவசைலம் உள்ளிட்ட பகுதியில் 2,500 ஏக்கரில் அறுவடை செய்யும் பருவத்தில் நெற்பயிர்கள் மழைக்கு சாய்ந்து காணப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்தால் நெற்பயிரை கரை சேர்க்க முடியாத சூழல் உள்ளது. தாமதமாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதால் அறுவடை பருவத்தில் இயற்கை பாதிப்பினால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது என்றார் அவர்.