ஹாங்காங்கில் முழுமையான ஜனநாயகம் கோரி சாலை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களையும், சாலைத் தடுப்புகளையும் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வந்த போலீஸார், மாங்காக் மாவட்டத்தின் போராட்டப் பகுதியில் வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து சாலைத் தடுப்புகளை அகற்றினர். எனினும், போராட்டக்காரர்களை பலவந்தமாக வெளியேற்றப் போவதில்லை என அவர்கள் தெரிவித்தனர். ஹாங்காங்கின் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த மாங்காக் மாவட்டப் பகுதியிலிருந்து விலகி, சிறிய அளவில் போராட்டம் நடைபெறும் விக்டோரியா துறைமுகப் பகுதியில் சுமார் 30 போராட்டக்காரர்கள் இருந்தனர்.
போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து, அங்கிருந்து கலைந்து செல்லும்படி அவர்களிடம் ஒலிப்பெருக்கியில் வலியுறுத்தினர். எனினும், போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டாமல் அமைதியாக இருந்தனர்.
கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தால், ஜனநாயகவாதிகளுக்கும், அரசுக்கும் இடையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கும் மேல் முக்கிய சாலைகளில் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களை அப்புறப்படுத்த, கலவரத் தடுப்புக் கவசங்களுடனும், லத்திகள், மிளகாய்ப்பொடித் தூவிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடனும் போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. பதற்றத்தைத் தணிக்கும் வகையில், பேச்சு வார்த்தை நடத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் குழுக்களின் தலைவர்களுக்கு ஹாங்காங் ஆட்சித் தலைவர் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தார்