சென்னை அண்ணாநகரில் முதியோர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று குறைந்த விலையில் சத்தான உணவு வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது. இதுகுறித்து, இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வி.குளஞ்சியப்பன், தொழில் ஆலோசகர் யு.விஜயலட்சுமி ஆகியோர் கூறியது:
முதியோர் தினத்தையொட்டி, சென்னை அண்ணாநகரில் உள்ள திருவள்ளுவர் குடியிருப்புப் பகுதியில் முதியோர்களுக்கு உணவு வழங்கும் சேவை மையம் கடந்த 3-ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதியோர் நல மருத்துவ நிபுணர் வி.எஸ்.நடராசன் தொடங்கி வைத்தார்.
தற்போதைய சூழலில் வீட்டில் சமையல் செய்ய இயலாத முதியோர்கள் கடைகளுக்குச் சென்று உணவருந்தி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு அலைச்சல், அதிக செலவு ஏற்படுகிறது. எனவே, அவர்களுக்கு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட சத்தான உணவை குறைந்த விலையில் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக அண்ணாநகரில் இருந்து 2 கி.மீ. சுற்றளவுக்கு உள்பட்ட முதியோருக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளோம். உணவு தேவைப்படும் முதியோர் 94444 22890, 94449 83296 ஆகிய தொலைபேசி எண்களில் எங்கள் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம். அவர்களின் இருப்பிடங்களுக்கே நேரடியாகச் சென்று உணவு வழங்கப்படும்.
காலை, இரவு உணவாக இட்லி, சப்பாத்தி, உப்புமாவும், மதிய உணவாக சத்தான காய்கறிகளுடன் கூடிய அரிசி சாதமும் வழங்கப்படும் என்றனர்.