காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 125ஆவது பிறந்த தின விழா குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இக்குழுவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் குடும்பத்தினர் யாருக்கும் இடம் அளிக்கப்படவில்லை.இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:வரும் நவம்பர் மாதம், ஜவாஹர்லால் நேருவின் 125ஆவது பிறந்த தினமாகும். இதைக் கொண்டாடும் வகையில், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
புதிய குழுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைவராவார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், கலாசாரத் துறை அமைச்சர் ஸ்ரீபாத் யேசோ நாயக் ஆகியோர் அலுவல் சாரா உறுப்பினர்கள் ஆவர்.மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவ், சிக்கிம் முன்னாள் ஆளுநர் பி.பி. சிங், வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் எம்.கே. ரஸ்கோத்ரா, மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் ஜெனரல் சுபாஷ் காஷ்யப், மூத்த பத்திரிகையாளர்கள் ரஜத் சர்மா, ஸ்வபன் தாஸ்குப்தா, எம்.ஜே. அக்பர், காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங், மத்திய அமைச்சரவை முன்னாள் செயலர் நரேஷ் சந்திரா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு அக்குழுவின் தலைவராக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உறுப்பினர்கள் சோனியா காந்தி, பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் ஏ.கே. அந்தோணி, முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், முன்னாள் சட்ட அமைச்சர் கபில் சிபல் உள்ளிட்டோருக்கு புதிதாக அமைக்கப்பட்ட குழுவில் இடமளிக்கப்படவில்லை.