ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ‘எபோலா’ வைரஸ் காய்ச்சல் இந்தியாவிலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நைஜீரியா, லைபீரியா, சியானா, சையர் லியோன் ஆகிய 4 நாடுகளில், எபோலா வைரஸ் காய்ச்சல் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த நாடுகளில் இக்கொடிய காய்ச்சலுக்கு இதுவரை 1200 பேர் வரை பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த 4 நாடுகளில் 40 ஆயிரம் இந்தியர்கள் வாழ்வதாக மத்திய அரசின் கணக்கெடுப்பு கூறுகிறது. இவர்களில் சுமார் 1000 இந்தியர்கள் எபோலா வைரஸ் காய்ச்சலில் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இவர்கள் இந்தியாவுக்கு திரும்பும்பட்சத்தில் அவர்களை தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி நேற்று இரவு வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்தவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. அப்போது நைஜீரியாவில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை வருவது தெரிய வந்தது.
அங்கு வந்த பார்த்திபனை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றார்கள், சுகாதார துறையை சேர்ந்தவர்கள். அவருக்கு செய்த ரத்த பரிசோதனையிலும், ஆரம்ப கட்ட நடவடிக்கையிலும் அவருக்கு எபலோ காய்ச்சல் இல்லை என்று தெரிகிறது. இருந்தாலும் முழு தகவல்களையும் பெறுவதற்கு அவரது ரத்த பரிசோதனை அறிக்கை புனேவுக்கு அனுப்பபட்டு உள்ளது. அவருக்கு நோய் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை .அவர் இப்போது நலமுடன் தான் இருக்கிறார் , எனவே யாரும் பயப்பட வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் கூறி உள்ளனர்.