BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday 3 August 2014

பகிரங்க மன்னிப்பு கேட்டார் ராஜபக்சே மோடி, ஜெயலலிதாவை இழிவுபடுத்திய விவகாரம் : இலங்கைக்கு கடும் கண்டனம்

சென்னை: மீனவர்கள் பிரச்னை பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுவது பற்றி இழிவாக விமர்சித்த விவகாரத்தில், இலங்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தனது ராணுவ இணையதளத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கட்டுரையை நீக்கியது மட்டுமின்றி, இந்தியாவிடம் அதிபர் ராஜபக்சே பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.  இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: சர்வதேச எல்லையை கடந்து வந்து இலங்கை எல்லைக்குள் வந்து தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதாலேயே அவர்கள் மீது இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கிறது. சர்வதேச அளவில் மீன் பிடிக்க தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதாலேயே மீன் வளம் பாதிக்கப்படுகிறது. அதற்காக அடுத்த நாட்டு எல்லைக்குள் சென்று மீன் பிடித்து, கொள்ளையடித் துச் செல்வது எந்த வகை யில் நியாயம்? இதனால் இலங்கையின் மீன் வளம் பாதிக்கப்படுவதோடு, வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.

இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதுகிறார். ஒருவேளை இந்த படகுகள் ஜெயலலிதாவுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் சொந்தமானதாக இருக்குமோ? இவ்வாறு தொடர்ந்து கடிதம் எழுதி இலங்கை மீது நடவடிக்கை எடுக்கச் செய்ய ஜெயலலிதா நினைக்கிறார். ஆனால், ஜெயலலிதாவின் தாளங்களுக்கு தலையாட்டி மோடி அரசு நடனம் ஆடாது. ஜெயலலிதாவின் தவறான புரிதலின் பேரிலான கடிதத்திற்காக இலங்கை மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி நினைத்தால், அது சரியானதல்ல. இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த கட்டுரையின் அருகில், ஜெயலலிதாவின் படத்தை போட்டு, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதை தவறாகவும், இழிவாகவும் சித்தரித்து படம் வரையப்பட்டுள்ளது.

இது தமிழக தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாநில முதல்வர், அந்த நாட்டின் பிரதமருக்கு மீனவர்களை காப்பாற்றும்படி கடிதம் எழுதுவதை மற்றொரு நாட்டு அரசின் இணைய தளத்தில் இவ்வளவு மோசமாகவும், தரம் தாழ்ந்தும் விமர்சித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததையடுத்து, இலங்கை அரசு உடனடியாக அந்த படத்தை எடுத்துள்ளது. இதற்கிடையில், இலங்கை அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஞானதேசிகன் (காங்கிரஸ், மாநில தலைவர்): அரசியல் மாச்சர்யங்கள், கருத்து வேறுபாடுகள் என்பது அரசியலில் இருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை நாகரிகமற்ற முறையில் விமர்சிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இலங்கை மீனவர்கள், கச்சத்தீவு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் முட்டுக்கட்டை போடும் இலங்கை அரசு இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு இதுவரை தீர்வு காண முடியாமல் இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் இது போன்ற நச்சு கருத்துக்களை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தனியார் ஒருவர் வெளியிடுவதை தடுக்காமல் இருந்தது விஷமத்தனமானது. இது போன்ற கருத்துக்களை இலங்கை பாதுகாப்பு துறை இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): இலங்கை இணையதள கட்டுரையின் தலைப்பு தமிழக முதல்வரை மட்டுமின்றி, பிரதமரையும் இழிவுபடுத்துவதைப் போல அமைந்திருக் கிறது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இலங்கையின் இத்தகைய தரம் தாழ்ந்த, நச்சுத்தன்மை கொண்ட, அருவருக்கத்தக்க போக்கை இனியும் அனுமதிக்கக் கூடாது. இதற்காக டெல்லியில் உள்ள இலங்கை தூதரை இந்திய வெளியுறவுத்துறை உடனடியாக அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும்.  இக்கட்டுரைக்காக இலங்கை அதிபரும், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளரும் மன்னிப்பு கேட்கும்படி மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். மன்னிப்பு கேட்க இலங்கை அரசு மறுத்தால் அந்த நாட்டுடனான உறவை துண்டித்துக் கொள்ளவும் இந்திய அரசுத் தயங்கக்கூடாது.

வைகோ
( மதிமுக பொது செயலாளர்): தமிழக முதல்வரை கிள்ளுக்கீரையாக இலங்கை அரசு நினைப்பதற்கு யார் காரணம்? எவர் கொடுத்த துணிச்சல்?. வரலாற்றில் தமிழ்நாட்டையோ, தமிழக முதல்வரையோ இந்த அளவுக்கு இழிவுபடுத்த உலகில் இதுவரை எவரும் துணிந்தது இல்லை. இந்திய அரசு உடனடியாக இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடனான தூதரக உறவுகளை முறிக்க வேண்டும். இல்லாவிடில் சிங்கள அரசோடு கைகோர்த்து கொண்டு தமிழ் இனத்தைத் தண்டிக்கவும், தமிழ் மக்களை இழிவுபடுத்தவும் நரேந்திர மோடி அரசு துணிந்து விட்டதோ என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும். எனவே, இந்திய அரசு உடனடியாக இலங்கை அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரத்குமார் (சமக தலை வர்): தமிழக மக்களால் பெரிதும் மதித்து போற்றப்பட்டு வரும் முதல்வரை அவமதிப்பதும் ஏழரைக் கோடி தமிழக மக்களை அவமதிப்பதும் ஒன்று தான். இந்த கார்ட்டூன் குறித்து இலங்கை அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும். இணையதளத்தில் இருந்து உடனடியாக இந்த கார்ட்டூனை நீக்க வேண்டும். இல்லையெனில் இலங்கை மீதான தமிழக மக்களின் எதிர்ப்புணர்வு மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி. இது போன்ற செயல்களை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கமாட்டார்கள். இதேபோல், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் உள்ள தனது தூதரின் மூலம் இலங்கைக்கு அரசு மத்திய அரசும் தனது கண்டனத்தை தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய கட்டுரையை இணையதளத்தில் இருந்து நீக்கிய இலங்கை ராணுவம், பகிரங்க மன்னிப்பும் கேட்டது. அதிபர் ராஜபக்சேவும் வருத்தம் தெரிவித்தார். இது பற்றி இலங்கை ராணுவம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ராணுவத்தின் இணையதளத்தில் முறையான அனுமதியில்லாமல் இந்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இது இலங்கை அரசு மற்றும் ராணுவத்தின் நிலைப்பாடு அல்ல. அதனால், இந்த கட்டுரை உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுரை தவறுதலாக வெளியானதற்கு, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோரிடம் மன்னிப்பு கோருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. இலங்கை அரசின் இந்த செயலுக்கு மத்திய அரசு திருப்தி தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் கூறுகையில், கட்டுரை வெளியானது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அக்கட்டுரை நீக்கப்பட்டது. மேலும் பகிரங்க மன்னிப்பையும் இலங்கை கேட்டுள்ளது. பிரச்னையை எழுப்பிய உடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது திருப்தி அளிப்பதாக உள்ளது. அதே நேரத்தில் இப் பிரச்னையில் வேறு நடவடிக்கைகள் தேவைப்பட்டால் அதுவும் எடுக்கப்படும் என்றார்.  முன்னதாக, இந்த கட்டுரை தொடர்பாக இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies