ஸ்டாலினுடன் பிரச்சனை செய்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இப்போது தனியாக இருந்து வருகிறார் அவரது சகோதரர் அழகிரி. இந்த பிரச்சனைக்கு எப்படி முற்று புள்ளி வைப்பது என தெரியாமல் இருக்கிறார் கருணாநிதி. திமுக வில் இருக்கும் சகுனி யார் என்பதை கட்சி தலைமை உணர்ந்து கொள்ள வேண்டும் என மறைமுகமாக ஸ்டாலினை தாக்கி பேசியுள்ளார் அழகிரி. இது குறித்து அவர் பின் வருமாறு கூறியுள்ளார்.
திமுக அமைப்புச் செயலர் பொறுப்பில் இருந்த பெ.வீ.கல்யாண சுந்தரம் தலைவர் கருணாநிதிக்கு அனுப்பிய கடிதத்தில், கட்சி தோல்வி பாதையில் செல்கிறது, கட்சிக்காக உழைக்கும் ஸ்டாலின், 2016 சட்டசபைத் தேர்தலுக்கான, முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் தயாநிதி, கனிமொழி, ஆ.ராஜா ஆகியோரை, கட்சியில் இருந்து நீக்க வேண்டும், அப்போது தான், கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயர் நீங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால், அவர் மீது கடும் ஆத்திரமடைந்த கட்சித் தலைமை, கழகக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், பெ.வீ.கல்யாண சுந்தரத்தை கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைப்பதாக திமுக பொதுச் செயலர் அன்பழகன் அறிவித்திருந்தார். இனி யாரும், கட்சித் தலைமையை ஏமாற்ற முடியாது, கட்சியின், அதிகார மையமாக துடிக்கும் ஸ்டாலின் தான், இப்படிப்பட்டவர்களின் பின்னணியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை கட்சித் தலைமை உணர்ந்து விட்டது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.