BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday 14 August 2014

சுதந்திர போராட்டமும், 2-ம் உலகப் போரும்...

ஆகஸ்டு–15 சுதந்திரகாற்றை இந்தியா சுவாசிக்க தொடங்கிய நாள்! எப்படியோ ஒரு வகையில் நம் தேசத்தின் அடிமை விலங்கொடியவும், தேசிய கொடி பட்டொளி வீசி பறக்கவும் 2–ம் உலகப்போரும் உதவியதை மறக்கவும் முடியாது! சரித்திரத்தில் மறைக்கவும் முடியாது!

அட்டென்சன்...

ஸ்டான்டட் ஈஸ்...

என்று விளையாட்டு வாத்தியார் உரத்த குரலில் சொல்வதும்... அதற்கு ஏற்றாற்போல் கால்களை வைத்து நிமிர்ந்து நிற்பதும்... அடுத்த கணம் தலைமை ஆசிரியர் கொடி கம்பத்தில் கட்டியிருக்கும் சுருக்கு கயிற்றை அவிழ்த்து தேசிய கொடியை ஏற்றியதும் கொடிக்குள் இருந்து பூக்கள் சிதறி அந்தரத்தில் பறக்கும் காட்சியும்... அதை தொடர்ந்து வாயில் வந்த ராகப்படி தேசிய கீதத்தை பாடி முடித்துவிட்டு, வரிசையில் நின்று மிட்டாய் வாங்கிவிட்டு பட்டாம் பூச்சிகளாய் பறந்துவிடுவோம். இது பள்ளி பருவத்து சுதந்திர தினம்!

கல்லூரி பருவத்திலும் இதே காட்சிகள்தான்! அதன் பிறகு எல்லா பருவத்திலும் ஆகஸ்டு 15 வந்து விட்டால் போதும்... மனதில் இனம் புரியாத ஒரு கர்வம் வந்துவிடும். வாகனங்களில் தேசிய கொடியை வாங்கி கட்டிக் கொள்வது. தேசிய கொடி சின்னத்தை சட்டைகளில் அணிந்து மகிழ்வது!
முக்கிய இடங்களில் கொடியேற்றுவார்கள். இனிப்புகள் வழங்கப்படும். கண்ணை கவரும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடக்கும். அதையும் பார்க்கிறோம்... ரசிக்கிறோம்...

இதுதான் நமக்கு தெரிந்த சுதந்திரதினம்! சுதந்திரம் இவ்வளவு சாதாரணமானதா? இதற்காகவா நம் முன்னோர்கள் கண்ணீரும், செந்நீரும் சிந்தி உயிர்த்தியாகம் செய்தார்கள்....?

ஐ லவ் இந்தியா என்று பெருமையுடன் சொல்கிறோமே! ஏன்? நம் தாய் நாடு எப்படிப்பட்டது? கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பரந்து விரிந்து கிடக்கும் இந்த தேசத்தில் எல்லா வளங்களும் நிறைந்து கிடக்கின்றன.

இந்த வளங்கள்தான் அந்த காலத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கண்களை உறுத்தியது. வர்த்தகத்துக்கு வந்த கிழக்கிந்திய கம்பெனியினர் குவிந்து கிடந்த இயற்கை வளங்களை பார்த்து சொக்கி போனார்கள். எப்படியும் இந்த நாட்டை கைப்பற்றி விடவேண்டும் என்று கங்கணம் கட்டினார்கள்.

1612 முதல் 1752 வரை கிழக்கிந்திய கம்பெனிகள் நம்மீது ஆதிக்கம் செலுத்தியது. அந்த கால கட்டத்தில் பல மன்னர்களும், குறுநில மன்னர்களும் ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். வர்த்தகம் என்ற முகமூடியுடன் வந்தவர்கள் நாட்டை கைப்பற்ற நம்மவர்களிடையே சிண்டு முடியும் வேலையை கச்சிதமாக செய்தார்கள். ஆசைக்கு மயங்கியவர்களை அடிமையாக்கினார்கள். எதிர்த்தவர்களை அவர்களுக்குள்ளேயே மோத விட்டு லாவகமாக வளைத்தார்கள்.

இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பல சமஸ்தானங்கள் ஆங்கிலேயருக்கு அடிமை சாசனம் எழுத வேண்டியதாயிற்று.

அவர்களின் செப்படி வித்தைகளை புரிந்து கொண்ட மானமுள்ள வீரமன்னர்கள் எதிர்த்தார்கள். பல கட்டபொம்மன்களும், ஊமைத்துரைகளும் எதிர்த்து நின்றாலும் ஒரு சில எட்டப்பன்களும் இருந்ததால் போராட்டம் நசுக்கப்பட்டது.

1858 முதல் இந்தியா இங்கிலாந்து அரசின் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டது. உலகம் முழுவதும் இந்தியா உள்பட 60–க்கும் மேற்பட்ட நாடுகளை இங்கிலாந்து அடிமைப்படுத்தி வைத்திருந்தது.

வல்லரசு நாடாக வலம் வரும் அமெரிக்காவிலும் பூர்வீக குடிமக்களை அழித்து ஒழித்து விட்டு இங்கிலாந்துகாரர்கள் குடியமர்த்தப்பட்டனர். ஆனால் விரைவிலேயே அமெரிக்கா தனித்து பிரிந்து சென்றுவிட்டது. 20–க்கும் மேற்பட்ட நாடுகளை பல்வேறு காரணங்களால் இங்கிலாந்து தனது கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து விட்டது.

ஆனால் இந்தியாவை விடுவிக்க மனம் வரவில்லை. இங்குள்ள மக்களின் அறியாமை, ஒற்றுமையின்மையை சாதகமாக்கி வளங்களை சுரண்டியதால் இந்தியாவை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டது.

உலகின் பலநாடுகள் சுதந்திர காற்றை சுவாசித்த போது பாரத பூமியிலும் பலர் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டார்கள். அந்த பட்டியலில் ஜான்சிராணி லட்சுமிபாய், புலித்தேவன் என்று பலரை பட்டியலிடலாம். இவர்களுடையை போராட்டம் தங்கள் ஆளுகையின் கீழ் இருந்த நிலப்பகுதியை மீட்பதற்காகத்தான் நடந்தது. இந்த நேரத்தில் 1885–ல் மும்பையில் கல்வியாளர்கள் 73 பேர் சேர்ந்து காங்கிரஸ் கட்சி என்ற அமைப்பை தொடங்கினார்கள். இந்த அமைப்பின் நோக்கம் படித்த இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஆங்கிலேயர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் இந்தியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதுதான்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக குறுநில மன்னர்கள் சிலர் நடத்திய உரிமை போராட்டம்–கல்வி, வேலை வாய்ப்பில் சலுகைகள் கேட்டு காங்கிரஸ் நடத்திய போராட்டம்! இந்த போராட்டங்கள் அசுர பலத்துடன் இருந்த ஆங்கிலேய அரசுக்கு யானையை எறும்பு கடித்த கதையாகத்தான் தெரிந்தது. எனவே அதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை.

ஆங்கிலேய ராணுவத்தில் இந்தியர்களும் சிப்பாய்களாக வேலையில் சேர்க்கப்பட்டார்கள். ஆனால் சிப்பாய்களுக்குள் இந்து–முஸ்லீம் என்று மோதவிட்டும் – இந்திய வீரர்களை கொடுமைப்படுத்தியும் மகிழ்ந்தார்கள். அத்தனை கொடுமைகளையும் பொறுத்து பொறுத்து பார்த்து இறுதியில் பொங்கி எழுந்த மங்கள் பாண்டே என்ற ராணுவ வீரர் வெள்ளைக்கார ராணுவ அதிகாரியை தாக்கினார். இதை கடும் குற்றமாக கருதி மங்கள் பாண்டே தூக்கில் போடப்பட்டார். இதனால் ராணுவ வீரர்கள் கொந்தளித்தனர்.
அவர்களிடையே நாம் அடிமையாக இருக்க கூடாது என்ற விடுதலை உணர்வு எழுந்தது.

இதனால் வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் சிப்பாய் கலகங்கள் நடந்தது. அப்போதுதான் பாலகங்காதரதிலகர், லாலாலஜபதி ராய், விபின்சந்திரபால், அரவிந்தர், வ.உ.சிதம்பரனார் போன்றோர்கள் சுதந்திர முழக்கத்தை தொடங்கினார்கள்.

சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம் என்று சுதந்திர போராட்டத்தை தொடங்கினார்கள். மக்களிடமும் சுதந்திர போராட்ட உணர்வு எழுந்தது. இந்த போராட்டத்தை காங்கிரஸ் அமைப்பும் கையில் எடுத்தது.
அந்த வேளையில் மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் பணியாற்றி வந்தார். அங்கும் வெள்ளையர்கள் கறுப்பர்களையும், இந்தியர்களையும் கொடுமைப்படுத்தினார்கள். அதை பார்த்து வெள்ளையர்களை எதிர்த்து போராடினார். இந்தியாவில் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய கோபாலகிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோருடன் காந்திக்கு தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் காந்தியை இந்தியாவுக்கு வந்து போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி அழைத்தனர்.

காந்தியும் சுதந்திர வேள்வியில் பங்கேற்க தாயகம் திரும்பினார். காந்தியின் வருகைக்கு பிறகு சுதந்திர போராட்ட களம் தீவிரமானது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம், அன்னிய பொருட்களை புறக்கணிப்பது உள்ளிட்ட புதுமையான அஹிம்சை வழி போராட்டம் நாடு முழுவதும் பிரபலமானது. தேசம் முழுவதும் சுதந்திர நெருப்பு சுடர்விட்டு எரிந்தது. விடுதலை வேட்கையோடு பலர் வீதியில் இறங்கி போராடினார்கள்.
காந்திக்கு பின்னால் லட்சக்கணக்கானவர்கள் அணிவகுத்தனர். இந்தியாவில் சுதந்திர போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது 1939–ல் 2–ம் உலகப்போர் தொடங்கியது. ஜெர்மனிய படைகள் ஐரோப்பிய நாடுகளை பிடித்தது. ஆப்பிரிக்க நாடுகளை இத்தாலி படைகள் பிடித்தது. ஜப்பான் படைகள் ஆசிய நாடுகளை கைப்பற்றியது. உலகம் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்த ஹிட்லரின் ஜெர்மனிய படைகள் 15 நாளில் பிரான்சை வீழ்த்தி தன்வசமாக்கியது. அடுத்ததாக இங்கிலாந்தை ஜெர்மனிய படைகள் முற்றுகையிட்டன. நாலு புறமும் கடல் சூழ்ந்த இங்கிலாந்தை அவ்வளவு எளிதில் கைப்பற்ற முடியவில்லை. பல மாதங்கள் போர் நீடித்தது.
சுதந்திர போராட்ட களத்தில் இருந்த நேதாஜி சுபாஸ் சந்திரபோசும் அந்த நேரத்தில் ஆயுத போராட்டம்தான் சுதந்திரத்தை பெற்றுத்தரும் என்று ஆயுத போராட்டத்துக்கு ஆயத்தமானார். ஜெர்மனிக்கு சென்று ஹிட்லரை சந்தித்தார். இங்கிலாந்தை எதிர்த்து போராட ஆயுத போராட்டத்துக்கு உதவி கோரினார். ஹிட்லர் உதவுவதாக உறுதியளித்தார். பின்னர் அவரது ஏற்பாட்டில் நீர்மூழ்க்கி கப்பல் ஒன்றில் ஜப்பான் சென்றார். அந்த நாட்டு தளபதியின் ஒத்துழைப்போடு இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி உருவாக்கினார்.

ரஷியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழ்ந்த இந்தியர்கள் பலர் நேதாஜியின் ராணுவத்தில் இணைந்தனர். அதில் தமிழர்கள் அதிகம் பேர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நேதாஜியின் ராணுவம் ஜப்பான் படையுடன் சேர்ந்து மணிப்பூரை தாக்கி சில பகுதிகளை பிடித்தது. ஆனால் இங்கிலாந்து ராணுவத்தின் பதிலடி தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வாங்கியது.

1939–ல் தொடங்கிய 2–ம் உலகப்போர் 6 ஆண்டுகள் நீடித்தது. உலகில் பல நாடுகளை தன் வசப்படுத்தி மாபெரும் வல்லரசாக திகழ்ந்த இங்கிலாந்து ஜெர்மனிய படைகளின் முற்றுகையில் திணறியது.

இங்கிலாந்தின் படைகள் பல நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால் படைபலமும் குறைவாக இருந்தது. போரில் வீழ்ந்து விடுவோமோ என்ற பீதி இங்கிலாந்தையும் தொற்றிக் கொண்டது.

இந்தியாவிலும் சுதந்திர போராட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து 2–ம் உலகப்போர் முடிந்ததும் சுதந்திரம் தருவோம் என்று இந்திய சுதந்திர போராட்ட தலைவர்களுக்கு வாக்குறுதி அளித்தது. சுதந்திரம் கிடைக்க அந்த உலகப் போரும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

1945–ல் உலகப்போர் முடிவுக்கு வந்த பிறகும் சுதந்திரம் தர காலதாமதம் ஆகியதால் இந்தியாவில் சுதந்திர போராட்டம் தீவிரமானது. போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து இனி மேலும் நமது ஜம்பம் பலிக்காது என்று புரிந்து கொண்ட ஆங்கிலேய ஏகாதிபத்தியம் பணிந்தது.

1947 ஆகஸ்டு 15–ல் சுதந்திரம் பெற்று அடிமைப் கொடி இறக்கப்பட்டு ஆனந்தம் பொங்க மூவர்ண தேசிய கொடி ஏற்றப்பட்டது.

உயிரே போனாலும் தாயின் மணிக்கொடியை தரையில் வீழ விட மாட்டேன் என்ற கொடிகாத்த குமரனை மறக்க முடியுமா?

ஆஷ்துரையை சுட்டுக்கொன்று தன்னுயிரை மாய்த்துக் கொண்ட வீரவாஞ்சிநாதனை மறக்கமுடியுமா?

ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் விட்டு... தாய் நாட்டு சுதந்திரத்துக்காக சிறையில் கரங்கள் சிவந்து, உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோராமல் செக்கிழுத்த வ.உ.சி.யை மறக்க முடியுமா?

சுதந்திரம்... சுதந்திரம் என்று மேடைப் பாடல்கள் மூலம் சுதந்திர தாகத்தை ஊட்டி வளர்த்து நாடகத்தில் நடித்து கொண்டிருந்த போதே விசுவநாததாஸ் உயிர் துறந்ததை மறக்க முடியுமா?

போலீசாருடன் நேருக்கு நேர் துப்பாக்கி சண்டை நடத்தி தனது துப்பாக்கியில் குண்டுகள் தீருவதை உணர்ந்ததும் கடைசி குண்டால் தன்னையே சுட்டு மாய்ந்த சந்திரசேகர் ஆசாத்தை மறக்க முடியுமா?

விடுதலை வாங்கி தந்த தேசபிதாவின் தியாகத்தைத்தான் மறக்க முடியுமா?
இந்த நீண்ட நெடிய வரலாற்றில் நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க தனது குடும்பத்தை மறந்து, தன்னலம் துறந்து, உயிரையும் மாய்த்த எத்தனையோ தியாகிகளின் தியாக வரலாறும் பின்னிப் பிணைந்து மெய்சிலிர்க்க வைக்கிறது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies