Doctor Vikatan: மலச்சிக்கலால் அவதிப்படும் குழந்தைகளுக்கு liquid paraffin கொடுக்கலாமா? எந்த வயதில், எந்த அளவு கொடுக்கலாம்? பெரியவர்களும் இதை மலச்சிக்கலுக்கு எடுத்துக்கொள்வது சரியானதா?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி
பாரம்பர்யமான மலமிளக்கிகளில் லிக்விட் பாரஃபின் (liquid paraffin) என்பது பிரபலமானது. இது சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் நீர்ச்சத்தை அதிகரிக்கும். அதன் விளைவாக, இறுகி, வெளியேற முடியாத மலமானது சற்று இளகி வெளியேற உதவும். அதனால் மலச்சிக்கல் பிரச்னை இல்லாமல் தவிர்க்கலாம்.
குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோருமே liquid paraffin எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இதை எத்தனை நாள்களுக்குக் கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். மலச்சிக்கலுக்கான மருந்தாக, இதைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டால், நாளடைவில் இது இல்லாமல் மலம் கழிக்க முடியாது என்ற நிலை ஏற்படலாம்.
சில குழந்தைகளுக்கு ஹேபிச்சுவல் கான்ஸ்டிபேஷன் (Habitual constipation) என்ற பிரச்னை இருக்கலாம். அதாவது மலம் இறுகி வருவதால் ஏற்படுகிற வலிக்கு பயந்து, சில குழந்தைகள் அதை வெளியேற்றாமல் அடக்கிக் கொள்வார்கள். அது போன்ற தருணங்களில் குழந்தைகளுக்கு லிக்விட் பாரஃபின் கொடுத்துவிட்டு, குழந்தை எளிதாக மலம் கழித்ததும், நார்ச்சத்துள்ள உணவுகள், பருப்புகள், பால், தண்ணீர் போன்றவற்றைக் கொடுத்துப் பழக்கலாம். இதையெல்லாம் செய்தபிறகு எளிதாக மலம் கழிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதன் பிறகு லிக்விட் பாரஃபின் தேவைப்படாது.
பெரியவர்களைப் பொறுத்தவரை எந்தப் பிரச்னையால் மலச்சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். லிக்விட் பாரஃபின் எடுப்பதானால் மருத்துவரை அணுகி, எவ்வளவு, எத்தனை நாள்களுக்கு எடுக்க வேண்டும் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டே எடுக்க வேண்டும்.
மலச்சிக்கலுக்கான காரணம் அறிந்து, அதற்கேற்ற சிகிச்சையை எடுப்பதுதான் சரியானது. ஒருவேளை வேறு காரணங்கள் இருந்து, அதற்கான சிகிச்சை எடுக்காமல், லிக்விட் பாரஃபின் எடுத்துக்கொண்டால், உண்மையான காரணம் சரியாகாமலேயே தொடரும். எனவே, மருத்துவரை அணுகிய பிறகே இதை பற்றி முடிவு செய்ய வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.