பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துகள் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீமானின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சீமான், " தமிழ்நாட்டில் பெரியாருக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. பெரியாரை ஆதரித்து பேசும் இத்தனை தலைவர்களில், யாராவது ஒருவர் பொதுத்தேர்தலில் பெரியாரின் சித்தாந்தங்கள், தத்துவங்களை பேசி வாக்கு சேகரிக்க தயாராக இருக்கிறீர்களா? தடை செய்யப்பட்ட இயக்கம், பயங்கரவாதி என்று சொல்லும் என் தலைவனின் பெயரை சொல்லி வாக்கு சேகரிக்க தயாராக இருக்கிறேன்.
திராவிட எதிர்ப்பு என்று பேசினால் ஆரியம் உள்ளே வந்துவிடும் என்று பேசினார்கள். ஆரியத்தோடு கைகோத்துக் கொண்டு எதிர்ப்பதாக பெரியாரும் அண்ணாவும் கூறினர். ஆனால் திராவிடத்தை ஆதரித்த பெரியார் ஆரியத் தலைமையுடன் நட்புடன் இருந்தார். பெரியாரின் தத்துவங்களை மட்டுமே பேசி ஓட்டு சேகரிக்க எந்த தலைவராவது தயாராக உள்ளனரா? வள்ளலார், அய்யா வைகுண்டர் போல என்ன புரட்சியை செய்தார் பெரியார்?
பெரியார் குறித்து பேச பொது விவாதத்திற்கு நான் இரு கரம் நீட்டி தயாராக உள்ளேன். பெரியார் என்ன சமூகநீதி செய்தார்?; பெண்ணுரிமை பற்றி பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது" என்று பேசியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், " சமூக நீதி என்பது என்ன? அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிப்பது.
கலைஞர் காலத்தில் அவரது வீட்டிலேயே இரண்டு அமைச்சர்கள், தற்போதும் அதே நிலைதான் தொடர்கிறது. இதுதான் சமூக நீதியா? வீட்டிற்குள் இருக்கும் சனாதனத்தை ஒழிக்காமல் வெளியே இருக்கும் சனாதனத்தை ஒழிப்பேன் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது” என்றிருக்கிறார்.
தொடர்ந்து பேசியவர், "இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களை வெளிநாட்டினர் என்று பெரியார் கூறி வந்தார். சிறை கைதிகளை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுபோதும் அவர்களை விடுவிக்காமல் இருந்தது இந்த திராவிட அரசுகள்தான். அதனால்தான் திமுகவுக்கு வாக்களிக்கும் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் சாத்தான் பிள்ளைகள் என்றேன். திராவிடத்தை எதிர்த்தால் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளே வந்துவிடும் என்பதா? அது எப்படி சரியாகும்? அம்பேத்கர் பெரியார் சிந்தனைகள் ஒன்று என என்னோடு விவாதிக்கத் தயாரா? அம்பேத்கர் பெரியார் சிந்தனைகள் ஒன்று என்றால் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன். சமூக நீதி பேசும் திராவிட கட்சிகள், இட ஒதுக்கீடு வழங்குவார்களா? இட பகீர்வுதானே தருகிறார்கள்.
கோனார் சமூகத்திற்கு இரண்டு அமைச்சர்கள் மட்டும் கொடுத்துவிட்டு கருணாநிதி காலத்திலும் ஸ்டாலின் காலத்திலும் தன் வீட்டிற்கு இரண்டு அமைச்சர்களை எடுத்துக் கொண்டனர். இது சமூகநீதியா? இதுதான் கொடுமையான சனாதனம். சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சமூக நீதியை பாதுகாக்கும் வகையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை தனி சட்டம் இயற்றி பாதுகாத்தவர் ஜெயலலிதாதான். திமுக அல்ல. பெண்ணுரிமை என்று பேசும் திமுகவில் கட்சியில் ஆட்சியில் மகளிருக்கு சம ஒதுக்கீடு வழங்கப்படுகிறதா? நாம் தமிழர் கட்சியில் மட்டும்தான் அனைத்திலும் 50%. பெரியாருக்கு மொழி, நாடு அபிமானம் கிடையாது. அதனால் அவர் மீது எங்களுக்கு அபிமானம் கிடையாது" என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.