அமைச்சர் பி. மூர்த்தியின் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு 45 அடி உயர கம்பத்தில் கொடி ஏற்ற அனுமதித்த குற்றச்சாட்டில் வருவாய்த்துறை ஊழியர்கள் மூவர் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள விவகாரம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகேயுள்ள வெளிச்சநத்தம் கிராமம் அமைச்சர் பி.மூர்த்தியின் தொகுதிக்குள் வருகிறது. கடந்த 7ஆம் தேதி ஏற்கனவே இருந்த 25 அடி கொடிக் கம்பம் அகற்றப்பட்டு, 45 அடி உயரக் கொடிக் கம்பத்தை வி.சி.க-வினர் நட்டனர். இதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என வருவாய்த்துறை அலுவலர்களும் காவல்துறையினரும் அங்கு வந்து கொடிக் கம்பம் அமைக்க அனுமதி மறுத்தனர்.
இதனால் வி.சி.க-னர் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. அரசு அலுவலர்கள், காவல்துறையினருடன் போராட்டம் நடத்தியவர்கள் வாக்குவாதம் செய்ததால் ஒருவழியாகக் கொடியேற்ற அனுமதி வழங்கினர். அதன் பின்பு மறுநாள் மதுரை வந்த திருமாவளவன் அந்த கொடிக் கம்பத்தில் கொடியேற்றி வைத்தார்.
இந்நிலையில் வி.சி.க-வினர் 45 அடி உயரக் கம்பத்தில் கொடியேற்றுவதைத் தடுக்க தவறியதாக சத்திரப்பட்டி வருவாய் அலுவலர் அனிதா, கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், கிராம உதவியாளர் பழனியாண்டி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாவட்ட நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் அரசு ஊழியர்கள் தரப்பிலும், வி.சி.க-வினர் தரப்பிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் துணை தாசில்தார் ராஜேஷிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய வி.சி.க-வினர், "மதுரை கலெக்டர் தொடர்ந்து வி.சி.க மீது மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி இரவு வி.சி.க சார்பாக மதுரை புதூரில் 62 அடி உயரக் கொடிக் கம்பம் நடப்பட்டு திருமாவளவன் கொடியேற்றி வைக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது கலெக்டர் உத்தரவு எனக் கூறி காவல்துறையினர் இரவோடு இரவாகக் கொடிக்கம்பத்தை அகற்றினர். இதை எதிர்த்துத் தொடர் போராட்டம் நடத்திய பிறகு கொடிக் கம்பத்தை ஒப்படைத்தனர்.
பிறகு மதுரை வந்த திருமாவளவன், அக்கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்து, 'கலெக்டர் சங்கீதா தொடர்ந்து வி.சி.க-வுடன் பிரச்னை செய்துகொண்டிருக்கிறார். நீதிமன்ற உத்தரவு பெற்ற பிறகும் வி.சி.க கொடிக் கம்பம் நடுவதற்குப் பல இடங்களில் அனுமதி அளிப்பதில்லை. தனிப்பட்ட முறையில் கலெக்டர் சங்கீதா விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். இதனை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன்' என்று அப்போது கடுமையாகப் பேசினார்.
இப்போது மறுபடியும் வெளிச்சநத்தத்தில் கொடிக் கம்பம் அமைக்க இடையூறு செய்ததோடு, ஆர்.ஐ, வி.ஏ.ஓ, தலையாரி ஆகியோரை கலெக்டர் இடைநீக்கம் செய்துள்ளார். ஏன் தொடர்ந்து வி.சி.க-வுக்கு எதிராக கலெக்டர் நடந்து கொள்கிறார் என்று தெரியவில்லை, இதை எங்கள் கட்சித் தலைமைக்குத் தெரிவித்துள்ளோம்" என்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/PorattangalinKathai