கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளிலும் சரி, ஒருநாள் போட்டிகளிலும் சரி அதிக ரன்களைக் குவித்தவர்கள் பட்டியலில் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரே முதலிடத்தில் இருக்கிறார். இந்தச் சாதனையை இந்த வீரர் முறியடிப்பார் என்று பல முன்னாள் வீரர்கள் பலரைக் காண்பித்தாலும் அவர்களால் சச்சினுக்கு அருகில் கூட வர முடியவில்லை. 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் சச்சின், மொத்தமாக 51 சதங்களுடன் 15,921 ரன்களைக் குவித்திருக்கிறார்.
அவருக்கு அடுத்தபடியாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 168 போட்டிகளில் 41 சதங்களுடன் 13,378 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்று மற்றும் நான்காவது இடங்களில் முன்னாள் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜேக் காலிஸ் 166 போட்டிகளில் 45 சதங்கள் உட்பட 13,289 ரன்களுடனும், டெஸ்ட் கிரிக்கெட்டின் தடுப்புச் சுவர் ராகுல் டிராவிட் 164 போட்டிகளில் 36 சதங்கள் உட்பட 13,288 ரன்களுடனும் இருக்கின்றனர்.
ஐந்தாவது இடத்தில், இந்த தலைமுறை கிரிக்கெட்டர்களில் ஃபேப் 4 (Fab four) என்று அழைக்கப்படுபவர்களில் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை ஓவர்டேக் செய்து ஓடிக்கொண்டிருக்கும் இங்கிலாந்தின் ஜோ ரூட் இருக்கிறார். மொத்தமாக 151 டெஸ்ட் போட்டிகளில் 12,886 ரன்கள் குவித்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்தவர்கள் டாப் 5 லிஸ்டில் இருக்கும் ஒரே ஆக்டிவ் பிளேயர் இவர் மட்டுமே.
நியூசிலாந்து - இங்கிலாந்து இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்டில் தனது 36 சதத்தைப் பூர்த்தி செய்த ஜோ ரூட் இன்னும் 493 எடுத்தால் டிராவிட், காலிஸ், பாண்டிங் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி சச்சினுக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பார். 2012-ல் தனது டெஸ்ட் கரியரைத் தொடங்கி 2020 வரையில் 17 சதங்களை மட்டுமே அடித்திருந்த ஜோ ரூட் 2021 முதல் இந்த நான்காண்டுகளில் மட்டும் 19 சதங்கள் அடித்து ஜோ ரூட் 2.0-வாக மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறார்.
இதே ஃபார்மில் இவர் தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் விளையாடினால், அதிக டெஸ்ட் ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சச்சினையும் முந்திவிடுவார். அதற்கு, சச்சினுக்கு ஜோ ரூட்டுக்கும் இடையில் 3,035 ரன்கள் என்ற இடைவெளி மட்டுமே இருக்கிறது. 34-வது வயதை நிறைவுசெய்யவிருக்கும் ஜோ ரூட், இன்னும் 16 டெஸ்ட் சதங்கள் அடித்தால், டெஸ்டில் 50 சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற சச்சினின் மற்றொரு சாதனையையும் முறியடித்து டெஸ்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலிலும் முதலிடம் பிடிப்பார்.
கடந்த ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலி தனது 50-வது சதத்தை அடித்து, ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார். அப்போது, சச்சின் டெண்டுல்கர், ``எனது சாதனையை இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கட்டரே முறியடித்தது பெருமை தான்.'' என்று விராட் கோலியைக் கண்டு பெருமிதப்பட்டார். ஆனால், தற்போது டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 30 சதங்களுடனும், ஜோ ரூட் 36 சதங்களுடனும் விளையாடி வருகின்றனர். கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலா 32 சதங்களை அடித்திருக்கின்றனர். இதில் யார் முதலில் சச்சினின் சாதனையை முறியடிப்பார் அல்லது காலம் கடந்து அவர் சாதனையை நிலைத்து நிற்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...