எதுக்களித்தல் எதனால வருது..?
வயித்துக்குள்ள போன உணவு, திரும்ப தொண்டை வரைக்கும் வந்துப்போற பிரச்னைதான் எதுக்களித்தல். இது எதனால வருது, வராம தடுக்க என்ன செய்யணும் அப்படிங்கிறதப்பற்றி இரைப்பைக் குடலியல் டாக்டர் பாசுமணி இங்கே விளக்குகிறார்.
''உணவு குழாய்க்கும், இரைப்பைக்கும் நடுவுல முடிச்சு மாதிரி ஓர் அமைப்பு இருக்கும். அதே மாதிரி இரைப்பைக்கும் சிறுகுடலுக்கும் நடுவுல முடிச்சு மாதிரி ஓர் அமைப்பு இருக்கும். இந்த ரெண்டு முடிச்சுக்கு நடுவுல, இருட்டு அறையில பற்கள் இல்லாத இரைப்பை, நாம சாப்பிடுற எல்லாத்தையும் அரைச்சு கூழ் ஆக்குது. அப்படி அரைக்கிறப்போ, உணவானது அதிகமா இருந்தா அரைக்கிறதுக்கு இடமிருக்காது. பிரஷர் குக்கர்ல அது கொள்ளும் அளவைவிட நீங்க நிறைய அரிசிப் போட்டு சமைச்சீங்கன்னா அது வெளியே வரத்தானே செய்யும். அதே மாதிரி இரைப்பையிலும் நடக்கும். அப்போ, அந்த ரெண்டு முடிச்சுகளும் வலுவா இருக்காதாங்கிற கேள்வி வரும். ஆரம்பத்துல அது வலுவாதான் இருந்திருக்கும். மது அருந்துறது, புகைப்பிடிக்கிறது, உடல் பருமன், வயித்தைச்சுற்றி நிறைய கொழுப்புன்னு உங்க லைஃப் ஸ்டைல் இருந்தா, அந்த முடிச்சுகள் பலவீனமாகிடும்.

காலாற நடங்க..
சாப்பிட்டு விட்டு எந்த வேலையும் செய்யாம இருந்தாலும், எதுக்களிக்கும். சாப்பிட்ட பிறகு கொஞ்சம் காலாற நடக்கணும்னு பாட்டிங்க சொன்னதுல அர்த்தம் இருக்கு.
ஸ்டிரெஸ், தூக்கமின்மை தவிருங்க..
நீங்க ஸ்டிரெஸ்ஸா இருந்தாலும், தூக்கம் கெட்டாலும் வயிறு அதோட வேலையை சரியா செய்யாது. அப்போதும் எதுக்களிக்கும்.
பெயின் கில்லர்..
இப்போ நிறைய பேர்கிட்ட பெயின் கில்லர் மாத்திரை போடுற பழக்கம் அதிகமா இருக்கு. சில நேரங்கள்ல உடல் பிரச்னைகளுக்காக எடுத்துக்கிற மாத்திரைகள்கூட அந்த ரெண்டு முடிச்சுகளை பலவீனமாக்கி எதுக்களிப்பு வர்றதுக்கு காரணமாயிடும்.
புதினா நல்ல உணவுப்பொருள்தான். ஆனா, சிலபேருக்கு அதை சாப்பிட்டா எதுக்களிக்கும். ஃப்ரைட் ஃபுட், ஆயிலி ஃபுட் பலருக்கும் எதுக்களிப்பை ஏற்படுத்தும். பிரியாணி சாப்பிட்டா அது செரிமானமாக 5 மணி நேரமாகும். அவ்ளோ நேரம் இரைப்பையில பிரியாணி இருக்கிறப்போ, அதுவும் எதுக்களிக்கலாம்.

எதுக்களிப்பு பிரச்னைக்கு தீர்வு..
சமைச்சோ, சமைக்காமலோ சாப்பிடக்கூடியவை எல்லாமும்தான் உணவுகள். ஆனா, நாம இப்போ சிப்ஸைகூட உணவுப்பொருள்னு நினைச்சி சாப்பிட்டுக்கிட்டிருக்கோம். வயித்துக்குள்ள உணவு போறது ஒருவழிப்பாதை தான். அதுதான் இயற்கையானது. வயித்துக்குள்ளப்போனது எதுக்களிக்குதுன்னா, உங்க வயிறு இயற்கைக்கு எதிரா நடக்குதுனு அர்த்தம்.
சாப்பிட்டவுடனே படுத்தாலும் எதுக்களிக்கும். ரெண்டு அல்லது மூனு மணி நேரம் கழிச்சு படுத்தீங்கன்னா, இரைப்பை அதுக்குள்ள செரிமானம் செஞ்சு அது வேலையை முடிச்சிருக்கும். ராத்திரி பத்து மணிக்கு, பதினோரு மணிக்கு சாப்பிட்டீங்கன்னா அல்லது மிட் நைட் பிரியாணி சாப்பிட்டீங்கன்னா எதுக்களித்தல், கூடவே நெஞ்செரிச்சல் வரத்தான் செய்யும். அளவா சாப்பிடுங்க. அதையும் நேரத்தோட சாப்பிடுங்க. பாக்கெட்ல அடைக்கப்பட்ட பொருள்களை உணவுன்னு நம்பி சாப்பிடாதீங்க. கூடவே, ஆரோக்கியமான லைஃப் ஸ்டைலை கடைபிடியுங்க. எதுக்களிப்பு பிரச்னை வரவே வராது'' என்கிறார் டாக்டர் பாசுமணி.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
