நீளமாக நகம் வளர்த்து, டார்க் கலர்களில் நெயில் பாலிஷ், நெயில் ஆர்ட் செய்து கொள்வதுதான் இப்போதைக்கு நக அழகியல் டிரெண்ட். நகங்களை நோய்த்தொற்று இல்லாமல், உடையாமல், பளபளப்பாக எப்படிப் பராமரிப்பது? அழகுக்கலை நிபுணர் கீதா அசோக் சொல்லித் தருகிறார்.
நகங்களின் நுனிகளில்தான் நோய்த்தொற்று அதிகம் ஏற்படும். அதனால், நீளமான நகங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை அழுக்கில்லாமல் சுத்தமாக பராமரியுங்கள். கூடவே, 15 நாள்களுக்கு ஒரு தடவை நகங்களை ட்ரிம் பண்ணுங்கள். இதுதான் முறையான நக பராமரிப்பு.
விரல்களின் தசையைத் தாண்டி மிக நீளமாக நகம் வளர்க்கும்போது, நீட்டிக் கொண்டிருக்கும் நகங்களில் அவ்வளவாக வலிமை இருக்காது. தவறுதலாக எதன் மீதாவது இடித்துக்கொண்டாலும் இந்த நகம் உடைந்து விடும். அப்படி உடையும்போது. தசையுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் நகப்பகுதியும் சேர்ந்தே உடையும். இன்றைக்கு கை விரல்கள், கால் விரல்களில் நகம் வளர்த்து நெயில்பாலிஷ் போட்டுப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்படி வைத்திருக்கிறார்கள். இதில் ஒரு விரலில் மட்டும், பாதி நகம் உடைந்துபோனால், விரல் அழகே கெட்டு போய்விடும். அதனால், நகங்களை விரலுக்குத் தகுந்தபடி போதுமான அளவுக்கு மட்டும் வளருங்கள்.
சிலருக்கு நகத்தின் மேல் ஒரு லேயர் மட்டும் உரிந்து கொண்டே வரும். இவர்கள், 10 மில்லி ஆப்பிள் சிடர் வினிகர் , 5 மில்லி பாதாம் எண்ணெய் இரண்டையும் கலந்து சின்னக் கிண்ணங்களில் ஊற்றி, அதற்குள் கை விரல் நகங்களை 10 நிமிடங்கள் ஊற வையுங்கள். வாரத்துக்கு இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால், நகங்கள் உரிவது நிற்கும்.
பார்லர்களில் மெனிக்யூர் என்கிற பெயரில் வீரியம் அதிகமான சோப்பு மற்றும் ஷாம்புவில் ஊற வைத்தால், சில நாள்கள் வரைக்கும் கைகள் பளீரென தெரியத்தான் செய்யும். ஆனால், தொடர்ந்து இப்படி சருமத்தின் தோலில் இருக்கிற எண்ணெய்ப்பசையெல்லாம் போய் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இவர்கள், வீட்டிலேயே வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் எப்சம் சால்ட், ஒரு டீஸ்பூன் கல் உப்பு, ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணேய், 50 சொட்டுகள் ரோஸ் ஆயில், தேவையென்றால் கால் டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, அதில் கை விரல்களை ஊற வைத்தால், நகம் சுத்தமாவதுடன் பலமும் கிடைக்கும். கைகளின் சருமத்துக்கும் எந்தத் தீங்கும் வராது. இதை 15 நாள்களுக்கு ஒருமுறை செய்தால் போதும்.
இன்றைக்கு நிறையப் பெண்கள் டார்க் நெயில் பாலிஷ்தான் போட விரும்புகிறார்கள். பிளாக், டார்க் ப்ளூ, டார்க் மெருன் போன்ற அடர் நிற நெயில் பாலிஷ்களில் கெமிக்கல் அதிகம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். லைட் கலர்களில் கெமிக்கல்ஸ் குறைவு. சில நேரங்களில் டார்க் கலர் நெயில் பாலிஷை நகத்தில் இருந்து ரிமூவ் செய்த பிறகு நகத்தின் நிறமே நெயில்பாலிஷ் நிறத்துக்கு மாறியிருக்கும். இதற்குக் காரணம், அது மட்டரகமான பாலிஷ் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். டார்க் கலர் நெயில் பாலிஷ்களுக்கு நகத்தின் நிறத்தை மாற்றுகிற இயல்பு உண்டு என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இதற்கு, நகத்தின் மேல் கலரே இல்லாத ட்ரான்ஸ்பரண்ட் நெயில் பாலிஷை அப்ளை செய்துவிட்டு, அதன் மேலே நீங்கள் விரும்புகிற டார்க் கலரை அப்ளை செய்துகொள்ளலாம்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...