செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமணி (பெயர் மாற்றம்). இவரின் கணவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் ரமணி, வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மகள்களும் மகனும் வேலைக்குச் சென்றுவிட ரமணி மட்டும் வீட்டில் தனியாக இருப்பது வழக்கம். கடந்த 24-ம் தேதி ரமணி வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர் ஒருவர் வந்திருக்கிறார். வீட்டின் கதவை தட்டியதும் ரமணி கதவை திறந்தபோது மர்ம நபர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரமணியை மிரட்டியிருக்கிறார். பின்னர் ரமணி அணிந்திருந்த தங்கச் செயினை மர்ம நபர் பறிக்க முயன்றிருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த ரமணி, மர்ம நபரின் காலில் விழுந்து கெஞ்சியிருக்கிறார். அதனால் மனமிறங்கிய மர்ம நபர், ரமணியின் செயினைப் பறிக்காமல் அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறார்.
உடனே சாமர்த்தியமாகச் செயல்பட்ட ரமணி, `இப்போது வேண்டாம், வீட்டுக்கு ஆள் வந்துவிடுவார்கள். நாளைக்கு வா' என்று கூறியிருக்கிறார். அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த மர்ம நபர், அங்கிருந்து சென்றுவிட்டார். ரமணி கூறியதைப்போல மறுநாள், அந்த மர்ம நபர் வீட்டின் கதவை தட்டியிருக்கிறார். கதவை திறந்த ரமணியும் அந்த மர்ம நபரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார். ஆசையோடு சென்ற மர்ம நபருக்கு வீட்டுக்குள் அதிர்ச்சி காத்திருந்தது. ரமணியின் குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் அங்கு இருந்தனர். அவர்கள் அந்த மர்ம நபரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர், கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் மர்ம நபரை ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ரமணி, கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளிக்க... மர்ம நபரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் ராஜேஷ் கண்ணன் (28), கொடுங்கைரைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு ராஜேஷ் கண்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையில் அடைத்தனர்.