கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஹனி ரோஸ். திரைப்படங்களில் நடிப்பதைத் தாண்டி பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வைரலானவர்.
இந்த நிலையில் மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பின் யூ டியூப் சேனலில் நடிகர் பாபுராஜ் நடிகை ஹனி ரோஸிடம் நேர்காணல் நடத்தினார். அதில் ஹனி ரோஸ் கூறுகையில், "முதல் சினிமாவான `பாய் ஃபிரண்ட்' படத்தில் நடித்த காலம் முதல் திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கு நான் சென்று வருகிறேன். கொரோனா காலத்திற்கு சற்று முன்புதான் நான் திறப்பு விழாக்களுக்குச் செல்வதை மக்கள் கவனித்தார்கள். அதற்கு ஆன்லைன் மீடியாக்களின் வரவுதான் காரணம். கொரோனாவுக்குப் பிறகு யூ-டியூப் சேனல்கள் மூலம் எனது திறப்பு விழா நிகழ்ச்சிகள் வைரலாகி வருகின்றன. அதனால்தான் நான் செல்லும் நிகழ்ச்சிகளில் மக்கள் அதிகமாகக் கூடுகிறார்கள்.
கேரளாவில் அனைத்து விதமான நிறுவனங்களின் திறப்பு விழாக்களுக்கும் சினிமா பிரபலங்களை அழைக்கிறார்கள். தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்களில் துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளின் திறப்பு விழாக்களுக்கு அழைப்பார்கள். கேரள மாநிலத்தில் மெடிக்கல் ஸ்டோர் திறப்புவிழாவுக்கு வரை நான் சென்றுள்ளேன். என்னை ஒரு பெட்ரோல் பங்க் திறப்பு விழாவுக்கு அழைத்திருந்தார்கள். பெட்ரோல் பங்க் திறப்புவிழாவுக்கு எதற்காக என்னை அழைக்கிறார்கள் என எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த திறப்புவிழா பின்னர் நடைபெறவில்லை.
முன்பு எனக்கு ஒரு பாய் ஃபிரெண்ட் இருந்தார். இப்போது இல்லை. நல்ல பாய் ஃபிரெண்ட் இன்னும் கண்ணில் படவில்லை. என் வாழ்க்கைத் துணையை நானே தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது, வீட்டினர் தேர்வு செய்தாலும் அதற்கு சம்மதம் தெரிவிப்பேன். இரவு சினிமா பார்க்கும் பழக்கம் உள்ளதால் காலையில் கண்விழிக்க 10.30 மணி ஆகும். அதன் பிறகு ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபடுவேன். பள்ளி படிக்கும் காலத்தில் நாடகத்தில் நடித்துள்ளேன்.
அதன் பிறகு நடிப்பின்மீது ஆர்வம் ஏற்பட்டது. நான் 7-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் எங்கள் ஊரான தொடுபுழாவில் 'மூலமற்றம்' என்ற சினிமா படபிடிப்பு நடந்தபோது, அதைப் பார்க்கச் சென்றேன். அப்போது அந்த சினிமாவில் கன்ட்ரோலர் பொறுப்பில் இருந்த ஒருவர் என்னிடம், 'நீ பார்க்க ரொம்ப அழகாக இருக்கிறாய் சினிமாவில் நடிக்க வருகிறாயா' எனக்கேட்டார். அதன்பிறகு 10-ம் வகுப்பு படித்தபோது முதல் சினிமாவில் நடித்தேன். சமீபத்தில் தெலுங்கில் `வீர சிம்ஹா ரெட்டி' சினிமாவில் நடித்தது மறக்கமுடியாத நிகழ்வாக இருந்தது. தமிழில் `முதல் கனவே' சினிமா போன்ற சில சினிமாக்களில் நடித்துள்ளேன். போலீஸ் ஆப்பீசராக நடிக்க வேண்டும் என மிகவும் ஆசையாக உள்ளது. ஆக்ஷன் சினிமாவிலும் நடிக்க மிகவும் விருப்பமாக உள்ளது" என்றார்.