நாடாளுமன்றத்தின் குளிர்காலக்கூட்டத்தொடர் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான மசோதாவை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ராம்நாத் கோவிந்த் கமிட்டி ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டம் தொடர்பாக பரிசீலித்து அனைத்து தரப்பினரிடம் கருத்து கேட்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறது. அந்த அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் கொடுத்து இருக்கிறது. மத்திய அரசு இம்மசோதா விவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் ஒருமித்த கருத்தை எட்ட முடிவு செய்துள்ளது. எனவே இம்மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விரிவான விவாதத்திற்கு அனுப்பி வைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இம்மசோதா குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கலந்து ஆலோசிக்கும். அதோடு அனைத்து மாநில சபாநாயகர்களையும் அழைத்து பேசவும் இக்குழு முடிவு செய்துள்ளது. பொதுமக்களிடமும் கருத்து கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இதில் மக்களின் கருத்தை பெற அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு மித்த கருத்தை எட்டாமல் ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது சவாலானது என்று என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளது. ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்தை செயல்படுத்த அரசியலமைப்பு சட்டத்தில் 6 மசோதாவில் திருத்தம் செய்யவேண்டியிருக்கிறது. அதோடு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவையாகும். நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் பா.ஜ.க கூட்டணிக்கு அறுதிப்பெரும்பான்மை இருக்கிறது.
அதேசமயம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவது சவாலான காரியமாகும். நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபையில் மொத்தமுள்ள 245 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 112 உறுப்பினர்கள் இருக்கின்றனர். எதிர்க்கட்சிகளுக்கு 85 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 164 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாகும். மக்களவையில் மொத்தமுள்ள 545 உறுப்பினர்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 292 உறுப்பினர்கள் இருக்கின்றனர். மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு பெறவேண்டுமானால் 364 பேரின் ஆதரவு தேவையாகும்.
மத்திய அரசு மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. தேர்தலுக்கு முன் அறிவிக்கப்படும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வளர்ச்சிப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறது கூறி தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதோடு தேர்தலை தனித்தனியாக நடத்துவதால் பணம், நேரம், உழைப்பு வீணாகிறது என்று மத்திய அரசு வாதிடுகிறது. ஆனால் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. அதோடு சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களையும் நடத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், அரசியலமைப்பு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. ராம்நாத் கோவிந்த் அறிக்கையில் 2029ம் ஆண்டுக்கு பிறகுதான் ஒரு நாடு ஒரு தேர்தலை அமல்படுத்த முடியும் என்றும், மாநிலங்களிடம் ஒப்புதலை பெறவேண்டும் என்றும், நாடு தழுவிய அளவில் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு கூட்டத்தில் ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டம் தாக்கல் செய்யப்படாவிட்டால் அடுத்த கூட்டத்தொடரில் நிச்சயம் தாக்கல் செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒரு மித்த கருத்தை எட்டிய பிறகு நாடாளுமன்றத்தில் இத்திட்டத்தை தாக்கல் செய்யலாமா என்பது குறித்தும் அரசு பரிசீலனையில் உள்ளது. எனினும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக இருக்கிறார்.