BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 19 December 2024

Health: கத்தரிக்காய், அவரைக்காய், புடலங்காய்... எந்தக் காய்கறியில் என்ன சத்து இருக்கிறது?

காய்கறிகளில் உள்ள சத்துகளையும் காய்கறிகள் வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களையும் இங்கே அலசுகிறார் உணவு ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி.

''வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வந்தவுடன், நன்றாகக் கழுவி சுத்தம் செய்த பிறகுதான் ஃப்ரிட்ஜில் அடுக்க வேண்டும். காய்களை நறுக்கிய பிறகு கழுவக் கூடாது. சிலர் காய்களை வேகவைத்த நீரை வடித்துக் கொட்டிவிடுவது உண்டு. இது கூடாது. அளவாய்த் தண்ணீரைக் கொதிக்கவைத்து, நறுக்கிய காய்கறிகளை அந்தத் தண்ணீரிலேயே கொட்டி மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்தாலே, சில நொடிகளில் வெந்துவிடும். பிறகு அடுப்பை அணைத்தவுடன் உடனே, திறக்காமல் அப்படியே வைத்திருந்தால் காய்கறிகள் சுவையாக இருக்கும். பச்சையாகச் சாப்பிடும் போது காய்கறிகளை நன்றாகக் கழுவி, லேசாக வெந்நீரில் போட்டு எடுத்த பிறகு சாப்பிடுவது நல்லது'' எனக் காய்கறிகளைப் பயன்படுத்தும் விதம்குறித்து விளக்கியவர் காய்கறிகளில் உள்ள சத்துகள்குறித்தும் பட்டியல் போட்டார்.

கேரட்

கேரட்

பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் இதில் நிறைய இருக்கின்றன. பொட்டாஷியம், ஃபோலிக் அமிலம், கோலின், கால்சியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சி ஆகியவை ஓரளவும், மிகக் குறைந்த அளவு இரும்புச் சத்தும் இதில் உண்டு. கண், தோல் மற்றும் எலும்பு உறுதிபடவும், ரத்த விருத்திக்கும் மிகவும் நல்லது.

குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயோதிகர்கள் எல்லோரும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் அளவோடு சாப்பிட வேண்டும். துருவியும் சாப்பிடலாம். வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்து அப்படியே சாப்பிடலாம்.

பீன்ஸ்

பீன்ஸ்

வைட்டமின் - சி, ஃபோலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. ஓரளவு பொட்டாஷியம், துத்தநாகம், மிகக் குறைந்த அளவு கலோரி ஆகியவை இதில் இருக்கின்றன. அதிக நேரம் வேகவைத்தால் சத்துக்கள் குறைந்துவிடுவதால், மூடி போட்டு அரை வேக்காட்டில் வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது. ரத்தவிருத்திக்கு நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் பொரியல் செய்து சாப்பிடலாம். மலச் சிக்கல் பிரச்னைக்குத் தீர்வு தரும். சிறுநீரகக் கல்லடைப்பு இருப்பவர்கள் சாப்பிட வேண்டாம்.

வெண்டைக்காய்

வெண்டைக்காய்

அதிக அளவு ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, பொட்டாஷியம் ஓரளவும், மாவுச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின் குறைந்த அளவும் இருக்கின்றன.

உடல் செயல்பாடு நல்லபடியாக இருக்கவும், ரத்த விருத்திக்கும் உதவும். எல்லோருக்கும் ஏற்ற காய். கர்ப்பிணிப் பெண்கள் தினமும் சாப்பிடலாம். வதக்காமல், மூடி போட்டு அரை வேக்காட்டில் வேகவைத்துச் சாப்பிட வேண்டும்.

பாகற்காய்

பாகற்காய்

கலோரி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, புரதம் போன்றவை குறைந்த அளவே இருந்தாலும் உடம்புக்கு நல்ல எதிர்ப்பு சக்தியைத் தரும்.

பசியைத் தூண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பாக புற்றுநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், தொற்று நோய்கள் வராமலும் தடுக்கும். உடம்பில் சர்க்கரையின் அளவைக் குறைப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வயிற்றில் பூச்சித் தொல்லையை விரட்டி அடிக்கும். எல்லோருக்கும் ஏற்றது. கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம்.

புடலங்காய்

புடலங்காய்

நீர்ச்சத்து நிறைந்தது. மிகக் குறைந்த அளவு கலோரி, ஓரளவு நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம், குறைந்த அளவு இரும்புச்சத்தும் இதில் இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு ஏற்ற காய்கறி இது. கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம். ஆனால், சிறுநீரகக் கல்லடைப்பு இருப்பவர்கள் தவிர்க்கலாம்.

அவரைக்காய்

அவரை

நிறைய நார்ச்சத்து, ஓரளவு புரதம், குறைந்த அளவு பொட்டாஷியம், மிகக் குறைந்த அளவு கலோரி உள்ள காய்கறி இது. பயத்தம் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம். மலச் சிக்கல் பிரச்னை தீரும்.

கத்தரிக்காய்

கத்தரிக்காய்

ஃபோலிக் அமிலம், கொலின் மற்றும் நார்ச் சத்து இருக்கிறது. மிகக் குறைந்த கலோரி, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் நிறையத் தாது உப்புக்களும் உண்டு. உடல் இயக்கம் சீராவதற்கும் கத்தரிக்காய் பயன்படுகிறது. வாய்ப் புண்ணைக் குணப்படுத்தும். கத்தரிக்காயில் இருக்கும் விதைகள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். குழம்பில் போட்டும் பொரியல் செய்தும் சாப்பிடலாம்.

மஞ்சள் பூசணி

பூசணி

ஓரளவு பீட்டா கரோட்டின், பொட்டாஷியம், மக்னீஷியம், ஃபோலிக் ஆசிட் இருக்கிறது. கால்சியம், இரும்புச் சத்து குறைவு. நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைய இருப்பதால் எல்லோரும் சாப்பிட ஏற்றது. சிறிதளவு தித்திப்பு இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அதிகம் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்கலாம்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies